காஸாவில் உணவுக்காகக் காத்திருந்த 50 பேர் சுட்டுக்கொன்ற இஸ்ரேல் ராணுவம்!
காஸாவில் உணவுக்காகக் காத்திருந்த 50 பேரை இஸ்ரேல் ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர்.
பாலஸ்தீனத்தில் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி இஸ்ரேலில் திடீர் தாக்குதல் நடத்தி அங்குள்ள 251 பேரைப் பணயக் கைதிகளாக கைது செய்ததில் இருந்து அங்கு போா் நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 57,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளனா்.
மேலும் தற்போது காஸாவில் உணவு தேடி, உணவு மையங்களை நோக்கிச் செல்லும் குழந்தைகள் உள்பட அங்குள்ள மக்களை இஸ்ரேல் ராணுவத்தினர் இரக்கமின்றி சுட்டு வீழ்த்துகின்றனர்.
இந்நிலையில் இன்று(ஜூலை 19) காஸாவில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் உணவு மையங்களுக்கு அருகில் உணவுக்காகக் காத்திருந்த 32 பேரும் அடங்குவர். மேலும் 80-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
கடந்த மே 27 முதல் இதுவரை உணவுக்காக காத்திருந்த 800 பேர் கொலை செய்யப்பட்டிருப்பதாக ஐ.நா. தகவல் தெரிவித்துள்ளது.
உலக உணவுத் திட்ட அமைப்பு, காஸாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பசியால் மடிந்துவிடும் பேரழிவில் உள்ளனர். 3ல் ஒருவர் பல நாள்கள் உணவின்றித் தவித்து வருவதாகக் கூறியுள்ளது.

அதேபோல அங்கு இயங்கும் ஒரு சில மருத்துவமனைகளில்கூட போதிய மருந்துகள், எரிபொருள் இல்லை. இன்குபேட்டர் இன்றி பச்சிளம் குழந்தைகள் பலரும் உயிரிழந்து வருகின்றனர்.
இதனிடையே இஸ்ரேல் - காஸா இடையே போர்நிறுத்தம் தொடர்பாக இரு தரப்பிலும் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. காஸாவில் இருந்து மேலும் 10 பணயக் கைதிகள் விரைவில் விடுவிக்கப்பட உள்ளதாக டிரம்ப் இன்று கூறியுள்ளார். முன்னதாக ஓரிரு வாரங்களில் இஸ்ரேல் - காஸா இடையே போர்நிறுத்தம் வரலாம் என்று டிரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.