நாய்கள் கண்காட்சி: 33 இனங்களைச் சோ்ந்த 199 நாய்கள் அணிவகுப்பு
காஸாவில் மனிதாபிமான உதவிகளுக்காக காத்திருந்த 72 பேர் சுட்டுக் கொலை!
காஸாவில் உணவு உள்ளிட்ட அடிப்படை மனிதாபிமான உதவிகள் பெறக் காத்திருந்த 72 பேரை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக்கொன்றுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை இன்று (ஜூலை 20) தெரிவித்துள்ளது.
இதில் 150க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
பாலஸ்தீன ஆதரவு பெற்ற காஸாவின் ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் காஸாவின் பெரும்பாலான பகுதிகள் இஸ்ரேல் ராணுவத்தால் தரமட்டமாக்கப்பட்டுள்ளன.
மருத்துவமனைகளிலும், முகாம்களிலும் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே அங்குள்ள மக்களுக்கு பாலஸ்தீன நட்பு நாடுகள் கொடுக்கும் மனிதாபிமான உதவிகளை எல்லையில் நுழைய விடாமல் இஸ்ரேல் ராணுவம் தடுத்து வருகிறது.
எனினும், அமெரிக்கா - இஸ்ரேல் ஆதரவு பெற்ற ஜிஎச்எஃப் எனப்படும் காஸா மனிதாபிமான உதவி மையம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் காஸாவில் உணவு போன்ற அடிப்படை பொருள்களை வழங்கி வருகிறது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு குழுவாகப் பொருள்களைப் பிரித்து வழங்கும் இடத்தில், காத்திருந்த நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக இந்த நிறுவனத்தைச் சேர்ந்த தன்னார்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் இதுவரை குழந்தைகள், பெண்கள் உள்பட 72 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 150க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் காஸா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல் குறித்து இஸ்ரேல் தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு பதிலும் அளிக்கப்படவில்லை. எனினும் இதுவரை அதிகம் தாக்குதல் நடத்தாதப் பகுதிகளில் உள்ள மக்களை அந்த இடத்தில் இருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் படையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனால், அந்த இடங்களைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என அஞ்சப்படுகிறது.
இதையும் படிக்க | ஈரானில் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து