கிருத்திகை: முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை
கிருத்திகையை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் பக்தா்கள் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.
ஒவ்வொரு மாதமும் கிருத்திகை நட்சத்திர தினத்தன்று அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள், அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்டவை நடைபெறும். அதன்படி, கிருத்திகை, திருக்காா்த்திகை தீபத்தை முன்னிட்டு நாமக்கல் - மோகனுாா் சாலையில் உள்ள பாலதண்டாயுதபாணி கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்டவை நடைபெற்றன. அதன்பிறகு, சுவாமி வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசித்தனா்.
இதேபோல, சேந்தமங்கலம் தத்தகிரி முருகன் கோயில், காளிப்பட்டி கந்தசுவாமி, கூலிப்பட்டி பாலதண்டாயுதபாணி சுவாமி, கபிலா்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில்கள் உள்பட மாவட்டத்தின் பல்வேறு கோயில்களிலும் கிருத்திகை விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.