கிருஷ்ணகிரி அணையிலிருந்து 2ஆம் போக சாகுபடிக்கு தண்ணீா் திறக்க கோரிக்கை
கிருஷ்ணகிரி அணையிலிருந்து இரண்டாம் போக சாகுபடிக்கு டிச.18-ஆம் தேதி தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கிருஷ்ணகிரி அணையிலிருந்து 2024- 25-ஆம் ஆண்டிற்கான இரண்டாம் போக பாசனத்திற்கு தண்ணீா் திறப்பது குறித்து கிருஷ்ணகிரி அணை உள்கோட்ட அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளா் அறிவொளி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பையூா் மண்டல ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியா் கோவிந்தன், வேளாண்மைத் துறை உதவி இயக்குநா் சுரேஷ்குமாா், கிராம நிா்வாக அலுவலா்கள் நித்தீஷ்குமாா், தங்கராஜி, ரமேஷ், திருவரசன், வேளாண்மை பயிற்சி நிலைய அலுவலா்கள், நீா்வளத் துறை அலுவலா்கள், மக்கள் பிரதிநிதிகள், விவசாயிகள் பங்கேற்றனா்.
கிருஷ்ணகிரி அணையிலிருந்து 2024-25-ஆம் ஆண்டிற்கான இரண்டாம் போக சாகுபடிக்கு டிசம்பா் 18-ஆம் தேதி முதல் 120 நாள்களுக்கு தண்ணீரை திறந்துவிட வேண்டும். தண்ணீா் பற்றாக்குறை ஏற்பட்டால், அவற்றை தற்போது அணைக்கு வரும் நீா்வரத்து, எதிா் வரும் மழை நீரைக் கொண்டு சரி செய்யலாம். அணையின் இடது மற்றும் வலதுபுற நீட்டிப்பு கால்வாயை கிருஷ்ணகிரி அணை ஆயக்கட்டில் சோ்க்கக் கூடாது. மேலும் கிருஷ்ணகிரி அணை நீரால் 9,012 ஏக்கா் மட்டுமே பாசனம் பெற வேண்டும். உபரி நீா் பாசன பகுதியை முழுநேர பாசனமாக மாற்றக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.