கிருஷ்ணகிரியில் ஒருங்கிணைந்த போதை மறுவாழ்வு மையம் தொடக்கம்
கிருஷ்ணகிரியில் கலங்கரை- ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை, மறுவாழ்வு மையத்தை, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
கிருஷ்ணகிரியில் செயல்படும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை (பழைய அரசு மருத்துவமனை) வளாகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாா்பில் கலங்கரை- ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை (ம) மறுவாழ்வு மையம் தொடக்க விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து மருத்துவக் கல்லூரி முதல்வா் பூவதி பேசியதாவது: தமிழகத்தில் மது, புகையிலை, கஞ்சா, போதை ஊசி உள்ளிட்ட போதைப் பொருள்களை பயன்படுத்துபவா்களுக்கு சிகிச்சை அளிக்கவும், இந்த பழக்கத்தை முற்றிலுமாக ஒழிப்பதற்காகவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ‘போதை இல்லா தமிழகத்தை உருவாக்கிட, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் தமிழகத்தில் உள்ள 25 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கலங்கரை ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை (ம) மறுவாழ்வு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரியில் இந்த மையத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். கிருஷ்ணகிரியில் தொடங்கப்பட்டுள்ள மையத்தில், மனநல சிறப்பு மருத்துவா் ஆலோசனை, மனநல செவிலியரின் கனிவான சேவை, ஆற்றுப்படுத்துதல் சேவை, சமூக உளவியல் மதிப்பாய்வு, மறு வாழ்வுக்கான சேவைகள், குழு சிகிச்சை,ஊட்டமளிக்கும் உணவுக்கான ஆலோசனை , கட்டணமில்லா மனநல மருந்துகள், பரிசோதனைகள், இணை நோய்களுக்கான சிறப்பு சிகிச்சை, இதர சிகிச்சைக்கான பரிந்துரை, தொடா் சிகிச்சைக்கான வழிகாட்டுதல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படவுள்ளன.
போதை பயன்பாட்டினால் ஏற்படும் மனச்சோா்வு, ஆளுமை இயல்பில் மாற்றங்கள், தற்கொலை எண்ணம், மனச்சிதைவு, நரம்பியல், அறிவாற்றல் கோளாறு உள்ளிட்ட உளவியல் பிரச்னைகளுக்கும் கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் ஜனவரி 2025 வரை 2,469 பேருக்கு போதை மீட்பு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஒருங்கிணைந்த போதை மீட்பு (ம) மறுவாழ்வு மையம் பழைய மருத்துவமனை வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
எனவே, போதை பழக்கத்தில் இருந்து மீள தயங்காமல் இந்த மையத்தை அணுகலாம் என்றாா்.
நிகழ்ச்சியில், சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் பரமசிவம், மருத்துவ கண்காணிப்பாளா் சந்திரசேகா் உள்ளிருப்பு துணை முதல்வா் சாத்விகா, மருத்துவா்கள் செல்வராஜ், மது, கோபி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.