அஜித் படம் கைவிடப்பட்டது ஏன்? இயக்குநர் விக்னேஷ் சிவன் விளக்கம்!
குஜராத்தில் பிடிபட்ட சீரியல் கில்லர்! 25 நாள்களில் 5 கொலைகள்!! ரயில்களே கொலைக்களம்!
குஜராத்தில் இளம்பெண் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான ராகுல் ஜத், ஒரு சீரியல் கில்லர் என்பதையும், கடந்த 25 நாள்களில் மட்டும் 5 கொலைகள் செய்திருப்பதையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
ரயில் நிலைய சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து, குஜராத் மாநிலதில் 30 வயது ராகுல் ஜத் என்பவரை கைது செய்து விசாரணை செய்த காவல்துறையினர், அவர் ஹரியாணாவைச் சேர்ந்தவர் என்பதும், குஜராத் உள்பட 4 மாநிலங்களில் அவர் மீது ஏராளமான கொலை வழக்குகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில், ராகுல் பெரும்பாலான கொலை மற்றும் கொள்ளைகளை ரயில் நிலையங்களிலும் ரயிலிலும்தான் செய்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
கடந்த 14ஆம் தேதி, உட்வாடா ரயில் நிலையம் அருகே, 19 வயது இளம்பெண் உடல் தண்டவாளம் அருகே கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில், அவர் பயிற்சி வகுப்புக்குச் சென்று திரும்பியபோது பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
கொல்லப்பட்ட பெண், பலாத்காரம் செய்து கொல்லப்படுவதற்கு முன்பு, பின்னால் இருந்து தலையில் தாக்கப்பட்டுள்ளார் என்று உடல்கூறாய்வில் தெரிய வந்துள்ளது.
ரயில் நிலையம் அருகே இருந்த சிசிடிவி கேமரா மூலம் குற்றவாளியை அடையாளம் கண்ட காவல்துறையினர், மிகப்பெரிய தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போதுதான், அவர் அண்மையில் லஜ்போர் மத்திய சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டவர் என்று காவல்துறையினர் அடையாளத்தைக் கண்டறிந்தனர். அவர் 24ஆம் தேதி குஜராத்தில் கைது செய்யப்படுவதற்கு ஒரு நாள் முன்பு, தெலங்கானா மாநிலம் செகுந்தராபாத் அருகே ரயிலில், மற்றொரு பெண்ணைக் கொன்று பொருள்களை கொள்ளையடித்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ராகுலின் இருப்பிடத்தைக் கண்டறிவது சவாலாக இருந்தது. அவர் ஓரிடத்திலிருந்து, வெகு தொலைவில் இருக்கும் மற்றொரு இடத்துக்கு நாள்தோறும் பயணித்துக்கொண்டே இருந்துள்ளார்.
இதுவரை கர்நாடகம், மேற்கு வங்கம், தெலங்கானா, மகாராஷ்டிர மாநிலங்களிலும் கொலை, கொள்ளைச் சம்பவங்களில் அவர் ஈடுபட்டிருப்பதாகத் தெரிய வந்திருப்பதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரத்தில், சோலாபூர் ரயில் நிலையம் அருகே ரயிலில் ஒரு பெண்ணைக் கொலை செய்ததாகவும், மேற்கு வங்க மாநிலம் ஹௌரா ரயில் நிலையம் அருகே முதியவரைக் கொன்று கொள்ளையடித்ததாகவும் கர்நாடகத்தில் ஒரு கொலை செய்திருப்பதகாவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இவரைத் தேட சுமார் 2,000 சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் ஆராய்ந்துள்ளனர். இதற்கு முன்பு, ஆயுதக் கடத்தல், டிரக் திருட்டு என பல்வேறு மாநிலங்களில் பல காலக்கட்டங்களில் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ரயிலில், பெண்கள் அல்லது முதியவர்கள் தனியாக இருக்கும் போது இரவு நேரத்தில் அவர்களிடமிருந்து பொருள்களைக் கொள்ளையடித்து, பலாத்காரம் செய்வது, கொலை செய்வது போன்றவற்றில் ஈடுபட்டுள்ளார்.
புனே - கன்னியாகுமரி ரயிலில் 2023ஆம் ஆண்டு அக். மாதம் நடந்த பெண் கொலை வழக்கிலும் இவருக்குத் தொடர்பிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மிகப் பாதுகாப்பான ரயில் பயணமே, இவர்களைப் போன்ற கயவர்களால் அபாயப் பயணமாக மாறியிருப்பதை ரயில்வே காவல்துறையினர் கண்டறிந்து, இரவு நேரங்களில் பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு ஏற்படுத்தினால் குற்றவாளிகளைத் தேடி அலைவதைத் தடுக்கலாம் என்கிறார்கள் மக்கள்.