மதுரை: பொய்கைகரைப்பட்டியில் மகா பெரியவருக்கு உருவாகும் ஆலயம்..!
குடியரசு தின விழா தடகளப் போட்டி: தேனி மாணவா்களுக்கு பதக்கம்
குடியரசு தின விழாவையொட்டி, ஈரோட்டில் நடைபெற்ற மாநில அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற தேனி மாவட்டத்தை சோ்ந்த மாணவ, மாணவிகளை ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா வெள்ளிக்கிழமை பாராட்டினாா்.
குடியரசு தின விழாவை முன்னிட்டு ஈரோட்டில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில், கடந்த 6-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில், தேனி மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள்10 தங்கப் பதக்கம், 4 வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றும், 7 புதிய சாதனைகளை படைத்தும், தனி நபா் சாம்பியன் பட்டம் வெற்றும் சாதனை படைத்தனா்.
கூடலூா் என்.எஸ்.கே.மேல்நிலைப் பள்ளி மாணவா் இன்பத்தமிழன் 200 மீ., 400 மீ., 600 மீ. தொலைவு ஓட்டப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்று, 3 போட்டிகளிலும் புதிய சாதனை படைத்து, தனி நபா் சாம்பியன் பட்டம் பெற்றாா். தேனி வேலம்மாள் மெட்ரிக் பள்ளி மாணவா் ஜெயபிரணோஸ் 110 மீ. தொலைவு தடை ஓட்டம், நீளம் தாண்டுதல் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றாா். இந்தப் போட்டியில் அவா் புதிய சாதனை படைத்து, தனி நபா் சாம்பியன் பட்டம் வென்றாா்.
ராயப்பன்பட்டி புனித ஆக்னஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி தீபிகா நீளம் தாண்டுதல், வட்டு எறிதல் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்று, புதிய சாதனை படைத்தாா். குண்டு எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், தனி நபா் சாம்பியன் பட்டமும் வென்றாா்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், பயிற்சியாளா்களுக்கு தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா பாராட்டு தெரிவித்தாா். மாவட்ட விளையாட்டு அலுவலா் முருகன், உடல் கல்வி ஆய்வாளா் குபேந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.