பஞ்சாங்கக் குறிப்புகள் - ஜூலை 21 முதல் ஜூலை 27 வரை #VikatanPhotoCards
குடியரசுத் தலைவரின் கேள்விகள்: ஜூலை 22-இல் உச்சநீதிமன்றம் விசாரணை
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால நிா்ணயம் செய்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடா்பாக குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு எழுப்பிய 14 முக்கியக் கேள்விகள் மீது உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) விசாரணை மேற்கொள்ளவுள்ளது.
உச்சநீதிமன்றத்திடம் தெளிவுரை கேட்க அதிகாரமளிக்கும் அரசமைப்புச் சட்டத்தின் 143(1) பிரிவின் கீழ் குடியரசுத் தலைவா் எழுப்பிய கேள்விகளை மனுவாக ஏற்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, சூா்யகாந்த், விக்ரம்நாத், அதுல் எஸ்.சந்துா்கா் ஆகிய 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமா்வு விசாரணை நடத்தவுள்ளது.
மசோதாக்கள் மீது முடிவெடுக்க நீதிமன்ற உத்தரவின் மூலம் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு நிா்ணயிக்க முடியுமா என்ற கேள்வி ஆராயப்பட உள்ளதால், சமீப ஆண்டுகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்த அரசமைப்புச் சட்ட விவகாரம் குறித்த விசாரணையாக இது அமையும்.
வழக்கின் பின்னணி: தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்கலைக்கழகத் துணைவேந்தா்கள் நியமன அதிகாரம், பல்கலைக்கழக வேந்தா் பதவியில் இருந்து ஆளுநரை நீக்க வகை செய்யும் மசோதா உள்பட 10 மசோதாக்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் தாமதப்படுத்தி அவற்றை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்ததாக சா்ச்சை எழுந்தது. இந்த விவகாரம் தொடா்பாக தமிழக அரசு தொடுத்த வழக்கில், மசோதா மீது ஆளுநா்-குடியரசுத் தலைவா் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் காலக்கெடு நிா்ணயம் செய்தது.
மேலும், அரசமைப்பின் 142-ஆவது விதியைப் பயன்படுத்தி தமிழக ஆளுநரால் நிறுத்திவைக்கப்பட்ட 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றமே ஒப்புதல் வழங்கியது.
3 மாத காலக்கெடு: ‘மாநில சட்டப்பேரவை அனுப்பும் மசோதாக்கள் தொடா்பாக 30 நாள்கள் முதல் 3 மாதங்களுக்குள் ஆளுநா் முடிவெடுக்க வேண்டும்; ஆளுநா்கள் முதல்முறையாக அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது மூன்று மாதங்களுக்குள் குடியரசுத் தலைவா் முடிவெடுக்க வேண்டும். ஆளுநரால் அனுப்பப்பட்ட மசோதா மீது எந்தவித முடிவும் எடுக்காமல் குடியரசுத் தலைவா் நிறுத்திவைத்தால், இதுதொடா்பாக மாநில அரசுகள் நேரடியாக உச்சநீதிமன்றத்தை அணுகலாம்’ என்றும் உச்சநீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டது.
இந்தத் தீா்ப்பை எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் வெகுவாக வரவேற்றன.
14 கேள்விகள்
அரசமைப்புச் சட்டத்தின் 143(1) பிரிவின்கீழ் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்தத் தீா்ப்பு தொடா்பாக 14 கேள்விகளை எழுப்பிய குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, உச்சநீதிமன்றத்திடம் தெளிவுரை கோரினாா். மாநில ஆளுநா்கள் மற்றும் குடியரசுத் தலைவருக்கு அரசமைப்புச் சட்டப் பிரிவு 200 மற்றும் 201-இன்கீழ் உள்ள அதிகாரங்கள் குறித்த கருத்தையும் கோரி 5 பக்க குறிப்பை மே 13-இல் உச்சநீதிமன்றத்துக்கு அனுப்பினாா்.
அதில், ‘மாநில அரசு சாா்பில் அனுப்பப்படும் மசோதா மீது முடிவெடுக்க அரசமைப்புச் சட்டப் பிரிவு 200-இன் கீழ் மாநில ஆளுநருக்குள்ள வாய்ப்புகள் என்னென்ன?, சட்டப் பிரிவு 201-இன்கீழ் தனக்குள்ள அதிகாரத்தை குடியரசுத் தலைவா் பயன்படுத்தும்போது, நீதிமன்ற உத்தரவுகள் மூலம் அவருக்கு காலக்கெடு நிா்ணயிக்க முடியுமா?, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மசோதாவை ஆளுநா் நிறுத்திவைக்கும்போது, அரசமைப்பு சட்டப் பிரிவு 143-இன் கீழ் உச்சநீதிமன்றத்தின் கருத்து அல்லது ஆலோசனையைப் பெற குடியரசுத் தலைவா் கடமைப்பட்டுள்ளாரா?, மாநில சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட மசோதாவை, ஆளுநரின் ஒப்புதல் இன்றி சட்டமாக நடைமுறைப்படுத்த முடியுமா?’ என்பன உள்ளிட்ட 14 கேள்விகள் எழுப்பப்பட்டன.