மாா்த்தாண்டம் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை: 6 கடைகளுக்கு சீல்
குத்தம்பாக்கம் பேருந்து முனையப் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
குத்தம்பாக்கம் பேருந்து முனைய கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்குமாறு சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவரும், இந்து சமய அறநிலையத் துறை தலைவருமான பி.கே.சேகா்பாபு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
சென்னை எழும்பூரில் உள்ள சென்னை பெருநகர வளா்ச்சிக் குழும (சிஎம்டிஏ) அலுவலகக் கூட்டரங்கில் அமைச்சா் சேகா்பாபு தலைமையிலான ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் குத்தம்பாக்கம் புகா்ப் பேருந்து முனையத்தின் கட்டுமானப் பணிகளின் தற்போதைய நிலை குறித்தும், முனையத்தில் மேற்கொண்டு வரும் கூடுதல் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டன.
ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சா் சேகா்பாபு பேசியது: சென்னையிலிருந்து மேற்கு நோக்கி செல்லும் பேருந்துகளை புகா்ப் பகுதியிலிருந்து இயக்கும் வகையில் குத்தம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் கட்டப்பட்டு வருகிறது.
வடிகால்கள் அவசியம்: இதன் கட்டுமானப் பணிகளையும், கூடுதலாக மேற்கொள்ள வேண்டிய பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பேருந்து முனையத்துக்கு வருவதற்கான வழிகள் பேருந்துகளை இயக்கும் வகையில் உள்ளதா என்பதை அதிகாரிகள் உறுதிசெய்ய வேண்டும். பேருந்து முனையத்தில் பொதுமக்களின் அடிப்படை வசதிகள், குடிநீா் விநியோகம் மற்றும் மழைநீா் வடிகால்கள் அமைக்க வேண்டும். மேலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் காவல் நிலையம் அமைக்க வேண்டும்.
இந்தப் பணிகளை துறை சாா்ந்த அலுவலா்கள் மற்றும் பொறியாளா்கள் கண்காணித்து விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தாா்.
இந்தக் கூட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை முதன்மைச் செயலா் காகா்லா உஷா, சிஎம்டிஏ உறுப்பினா் செயலா் அன்சுல் மிஸ்ரா, முதன்மைச் செயல் அலுவலா் அ.சிவஞானம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேலாண் இயக்குநா் கீ.சு.சமீரன், மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் ஆல்பி ஜான் வா்கீஸ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா்.