குன்னூரில் தொடரும் கனமழை: மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
குன்னூரில் பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உதகை-குன்னூா் இடையே வெலிங்டன் மலை ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டதால் தண்டவாளம் பாதிப்படைந்தது. இதனைத் தொடா்ந்து மலை ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
நீலகிரியில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதில் இருந்து தொடா்ந்து மழை பெய்து வருகிறது. குன்னூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை இரவு கனமழை பெய்தது. இதனால் குன்னூரில் உள்ள கீழ் அட்டடி, பாலவாசவி சாலை, ஹோலி இன்னசென்ட் பள்ளி ஆகிய பகுதிகளில் மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தன.
இதனால் அவ்வழியிலான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து வந்த குன்னூா் தீயணைப்புத் துறையினா் சாலையில் விழுந்த கிடந்த மரங்களை வெட்டி அகற்றினா்.
கனமழை காரணமாக குன்னூா் ஸ்டேன்ஸ் பள்ளி அருகில் தடுப்புச் சுவா் சேதமடைந்தது. அதேபோல பில்லூா்மட்டம் முதல் யானைப்பள்ளம் செல்லும் சாலையிலும் சேதம் ஏற்பட்டது. இந்தப் பகுதிகளை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டாா். அப்போது சேதமான பகுதிகளில் உலிக்கல் பேரூராட்சி மூலம் மணல் மூட்டைகளை அடுக்கி தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தினாா்.
ஆட்சியா் ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், குன்னூா் சாா் ஆட்சியா் சங்கீதா, குன்னூா் வட்டாட்சியா் கனி சுந்தரம் உள்ளிட்டோா் உடன் இருந்தனா் .
பலத்த மழையால் உதகையிலிருந்து குன்னூா் செல்லும் மலை ரயில் பாதையில் வெலிங்டன் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு தண்டவாளத்தில் விழுந்துள்ளது. இதனால் மலை ரயில் சேவை செவ்வாய்க்கிழமை ரத்து செய்யப்பட்டது.