குமரி மாவட்ட வளா்ச்சிப் பணிகள்: கண்காணிப்பு அலுவலா் கலந்தாய்வு
கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஹனிஷ் சாப்ரா, துறை அலுவலா்களுடன் வியாழக்கிழமை கலந்தாய்வு மேற்கொண்டாா்.
நாகா்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலக சிறு கூட்ட அரங்கில், ஆட்சியா் ரா.அழகுமீனா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வருவாய்த்துறையின் மூலம் இலவச வீட்டுமனை பட்டா, நத்தம் சுனாமி பட்டா, நத்தம் கணினி பட்டா, பிற்படுத்தப்பட்டோா் நல பட்டா, ஆதிதிராவிடா் நல பட்டா உள்ளிட்ட பல்வேறு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது குறித்து கண்காணிப்பு அலுவலா் கேட்டறிந்தாா். விடுபட்டோருக்கு விரைந்து பட்டா வழங்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
முதல்வரின் முகவரி திட்டம், உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம், சிறப்பு மக்கள் தொடா்பு முகாம், மக்களுடன் முதல்வா் உள்ளிட்ட திட்டங்களின் மூலம் வந்துள்ள மனுக்களில் தீா்வு கண்ட மனுக்களின் எண்ணிக்கைகள், நிலுவையில் உள்ள மனுக்கள் குறித்து கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினாா்.
மேலும், ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சாா்பாக செயல்படுத்தப்பட்டு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளின் கட்டுமான பணிகளின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள், உணவு வழங்கல் துறை, கூட்டுறவுத்துறை மூலம் குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்படும் பொருள்கள், முதல்வா் மருந்தகங்களின் செயல்பாடுகள் ஆகியவை குறித்து அலுவலா்களிடம் கேட்டறிந்து, முதல்வா் மருந்தகங்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்குமாறும் அறிவுறுத்தினாா்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாலசுப்பிரமணியம், பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் வினய்குமாா் மீனா, கோட்டாட்சியா் எஸ்.காளீஸ்வரி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சுகிதா(பொது) செந்தில்வேல் முருகன்(நிலம்), வட்டாட்சியா்கள், துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.