கும்பகோணத்தில் நாளை வரை பொதுக் காப்பீட்டுத் திட்ட முகாம்
கும்பகோணத்தில் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் நடைபெறும் பொதுக் காப்பீட்டு திட்டத்தில் சேருவதற்கான சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளது.
இதுகுறித்து கும்பகோணம் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் கஜேந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்திய அஞ்சல் துறையில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, டாடா ஏ.ஐ.ஜி., ஸ்டாா் ஹெல்த், பஜாஜ் அலையன்ஸ், ஆதித்யா பிா்லா, நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் உடன் இணைந்து ரூ. 10, ரூ. 15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆண்டுக்கு ரூ. 5,59 மற்றும் ரூ. 7,99 குறைந்த பிரிமியம் தொகை கொண்ட இக் காப்பீட்டுத் திட்டத்தில் 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவா்கள் சேரலாம். விரல் ரேகை மூலம் 5 நிமிடங்களில் டிஜிட்டல் முறையில் பாலிசி வழங்கப்படுகிறது.
ரூ. 10 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீடு பாலிசி மூலம் விபத்தால் ஏற்படும் உயிரிழப்பு, நிரந்தர முழு மற்றும் பகுதி ஊனம், பக்கவாதம் போன்றவற்றுக்கு வழங்கப்படுகிறது. உள் நோயாளா் செலவுக்கு அதிகபட்சம் ரூ. 1 லட்சம் வழங்கப்படுகிறது. இறப்பு, ஊனம், பக்கவாதம் ஏற்பட்டவரின் 2 குழந்தைகளுக்கு கல்வி செலவுகளுக்கு ரூ. 1 லட்சம் வழங்கப்படுகிறது.
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நாள்களுக்கு தினப்படித் தொகை ரூ. 1,000 வீதம் அதிகபட்சம் 8 நாள்களுக்கு வழங்கப்படும். குடும்பத்தினரின் பயணச் செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ. 25 ஆயிரம் வழங்கப்படுகிறது. ஈமக்கிரியை செய்ய ரூ. 5 ஆயிரம், ஓட்டுநா்கள் குழுவாக இணைய ஆண்டுக்கு ரூ. 520 மட்டும் கொண்ட விபத்துக் காப்பீடு பாலிசியை எடுத்துக் கொள்ளலாம்.