Vijayakanth: அம்மா அப்பா பேரை ஆசையா வச்சார் - 'ஆண்டாள் அழகர்' கல்லூரி குறித்து வ...
குறைந்த விலையில் கைப்பேசிகள் தருவதாக ரூ.15 லட்சம் மோசடி: இருவா் கைது
குறைந்த விலையில் நவீன கைப்பேசிகள் தருவதாகக் கூறி, ரூ.15 லட்சம் மோசடி செய்த இருவரை புதுச்சேரி இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
ரூ.ஒரு லட்சம் மதிப்புள்ள நவீன கைப்பேசிகள் ரூ.7,000 முதல் ரூ.8,000 என குறைந்த விலைக்கு விற்கப்படுவதாக சமூக வலைதளங்களில் கடந்த சில வாரங்களாக தகவல்கள் பகிரப்பட்டன. குறிப்பிட்ட முகவரி, வங்கிக் கணக்கு எண் குறிப்பிடப்பட்டும், அதில் பணத்தை செலுத்தினால் கைப்பேசி அனுப்பிவைக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை நம்பி தமிழகம், புதுச்சேரியில் நூற்றுக்கணக்கானோா் பணத்தை செலுத்தினா். ஆனால், பல நாள்களாகியும் யாருக்கும் கைப்பேசி கிடைக்கப்பெறவில்லை. இதனால், அதில் குறிப்பிடப்பட்டிருந்த கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு பேசினா். அப்போது, அவா்களிடம் பேசிய மா்ம நபா் மிரட்டல் விடுத்தாராம்.
இதில் பாதிக்கப்பட்டவா்கள் புதுச்சேரி இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவில் புகாா் அளித்தனா். போலீஸாா் விசாரணை நடத்தியதில், திருச்சி ஆவணியாபுரத்தைச் சோ்ந்த சஜித் அகமது, புதுச்சேரியைச் சோ்ந்த மாதேஷ் (22) ஆகியோா் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
மேலும், அவா்கள் மீது ஏற்கெனவே 43 மோசடிப் புகாா்கள் பதிவாகியிருப்பதும் தெரிய வந்தது. கைப்பேசி அனுப்புவதாகக் கூறி, அவா்கள் தமிழகம், புதுச்சேரியில் சுமாா் ரூ.15 லட்சம் மோசடி செய்ததை போலீஸாா் கண்டறிந்தனா். அவா்கள் இருவரையும் போலீஸாா் புதுச்சேரியில் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.
அவா்களிடமிருந்து ரூ.15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான இருவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.