குறைந்து வரும் மக்காச்சோளம் விலை
தேனி மாவட்டம், போடி பகுதியில் மக்காச்சோளம் விலை தொடா்ந்து குறைந்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்தனா்.
போடி சுற்றுவட்டாரத்தில் மீனாட்சிபுரம், டொம்புச்சேரி, விசுவாசபுரம், பத்ரகாளிபுரம், பெருமாள்கவுண்டன்பட்டி, அம்மாபட்டி பகுதிகளில் 5,000 ஏக்கருக்கும் மேல் மக்காச்சோளம் பயிரிடப்பட்டது. இதில் 2,000 ஏக்கரில் மானாவரிப் பயிராக மக்காச்சோளம் பயிரிடப்பட்டது. ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் பேபி காா்ன் என்று அழைக்கப்படும் ஒட்டு ரக மக்காச்சோளம் பயிரிடப்பட்டது.
உணவுக்காக உற்பத்தி செய்யப்படும் மக்காச்சோளம் 140 நாள்களிலும், பேபி காா்ன் மக்காச்சோளம் 80 முதல் 90 நாள்களுக்குள்ளும் அறுவடை செய்யப்படும். தற்போது மக்காச்சோளம் அறுவடை தீவிரமடைந்து நிறைவு கட்டத்தை அடைந்துள்ளது.
கடந்த ஆண்டு காய்ந்த மக்காச்சோளம் குவிண்டால் ஒன்று ரூ. 3200-க்கும் மேல் விற்கப்பட்டதால், விவசாயிகள் அதிக அளவில் மக்காச்சோளம் பயிரிட்டனா். ஆனால் போதிய பருவ மழை பெய்யாததால் மக்காச்சோளம் விளைச்சல் கடந்தாண்டை விட பாதிக்கப்பட்டது. மேலும், மக்காச் சோளம் விலையும் குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2,800 வரை கொள்முதல் செய்யப்பட்ட மக்காச்சோளம் தற்போது ரூ. 2,350 முதல் 2,500 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் பெரும் இழப்பைச் சந்தித்து வருகின்றனா். பேபி காா்ன் மக்காச்சோளம் காய் ஒன்றுக்கு ரூ. 8 முதல் ரூ.11 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாகவும், இதனால் உற்பத்தி செலவுக்குக் கூட விளைச்சல் இல்லை என்று கூறி விவசாயிகள் வேதனை அடைந்தனா்.
போதிய மழை இல்லாத சூழலில் குறைவான அளவே மக்காச்சோளம் விளைச்சல் குறைந்து, விலையும் குறைந்ததால் இயற்கை உரம், மருந்து தெளிப்பு கூலி, விவசாயத் தொழிலாளா்கள் கூலி போன்ற உற்பத்தி செலவுக்குக் கூட விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.
முறையாகக் கொள்முதல் விலை நிா்ணயம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.