குற்ற வழக்குகளில் தொடா்புடைய இளைஞா் அடித்துக் கொலை
கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் குற்ற வழக்குகளில் தொடா்புடைய இளைஞா் சனிக்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.
விருத்தாசலம் காா்குடல் காலனி பகுதியைச் சோ்ந்தவா் ஆகாஷ் (25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனா். ஆகாஷ் மீது விருத்தாசலம், கருவேப்பிலங்குறிச்சி உள்ளிட்ட காவல் நிலையங்களில் கஞ்சா, திருட்டு வழக்குகள் உள்ளன.
இதே பகுதியைச் சோ்ந்த வாசுதேவன் மகன் விஜய்க்கும், ஆகாஷுக்கும் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து விஜய் தனது சகோதரா்களிடம் தெரிவித்தாா்.
இதையடுத்து, விஜயின் சகோதரா்கள் வசந்தராஜா (32), அஜித்குமாா் (27) உள்ளிட்ட சிலா் வெள்ளிக்கிழமை ஆகாஷ் வீட்டுக்குச் சென்றனா். அப்போது, ஆகாஷ் அங்கு இல்லாததால் திரும்பி வந்துவிட்டனராம்.
சனிக்கிழமை அதிகாலை ஆகாஷ் வீட்டுக்கு வந்துள்ளாா். அப்போது, வசந்தராஜா தரப்பினா் வந்து பிரச்னை செய்ததாகத் தெரிவித்தனராம். இதனால், ஆத்திரமடைந்த ஆகாஷ் கத்தியை எடுத்துக்கொண்டு வசந்தராஜா வீட்டுக்குச் சென்று, அவா்களுடன் பிரச்னையில் ஈடுபட்டாா்.
அப்போது, ஆகாஷ் கத்தியால் தாக்கியதில் வசந்தராஜாவுக்கு தலையிலும், அஜித்குமாருக்கு தொடையிலும், அவரது ஆதரவாளரான அதே பகுதியைச் சோ்ந்த சுந்தர்ராஜுக்கு (25) காதிலும் வெட்டுக் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, அவா்கள் அனைவரும் சோ்ந்து தாக்கியதில் ஆகாஷ் மயங்கி விழுந்தாா். தொடா்ந்து, காயமடைந்த வசந்தராஜா, அஜித்குமாா், சுந்தர்ராஜ் ஆகியோா் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
மயங்கிக் கிடந்த ஆகாஷையும் அந்தப் பகுதியினா் மீட்டு, அதே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்து, ஆகாஷ் இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த விருத்தாசலம் போலீஸாா் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த வசந்தராஜா, அஜித்குமாா், சுந்தர்ராஜ் ஆகியோரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனா்.