குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு: பேரருவியில் சிக்கி யானை உயிரிழப்பு
தென்காசி மாவட்டத்தில் தொடரும் கனமழை காரணமாக, குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 3ஆவது நாளாக சனிக்கிழமையும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் என அனைத்து அருவிகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், மாவட்ட நிா்வாகம் சாா்பில், குளிப்பதற்கான தடை சனிக்கிழமையும் நீட்டிக்கப்பட்டது.
யானை உயிரிழப்பு: இந்நிலையில், பேரருவியில் தண்ணீா் விழுந்து வழிந்தோடும் பாதையில் 300 மீட்டா் தொலைவில் சனிக்கிழமை துா்நாற்றம் வீசியது. பொதுமக்கள் சென்று பாா்த்தபோது, யானை இறந்துகிடந்தது தெரியவந்தது.
தகவலின்பேரில் மாவட்ட வன அலுவலா் நிகில்தம்பி, வனச்சரகா் சீதாராமன் உள்ளிட்டோா் வந்து விசாரணை மேற்கொண்டனா். இதுகுறித்து வனத்துறையினா் கூறியது: உயிரிழந்த 6 வயதான அந்த ஆண் யானை, 3 நாள்களுக்கு முன்பு மத்தளம்பாறை வனப் பகுதியில் நடமாடியுள்ளது. மலையின்மேல் பேரருவிப் பகுதியை வெள்ளிக்கிழமை கடக்க முயன்றபோது வெள்ளத்தில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிகிறது. கூறாய்வுக்குப் பின்னா், யானையின் உடல் அடக்கம் செய்யப்படும் என்றனா்.