கூடலூர்: பட்டியைத் திறந்த விவசாயி, கொத்து கொத்தாக செத்துக் கிடந்த ஆடுகள்! குழப்பத்தில் வனத்துறை...
வனங்கள் நிறைந்த நீலகிரியில் தொடரும் காடழிப்பு, வனவிலங்குகளின் வாழிட ஆக்கிரமிப்பு, வளர்ச்சி பணிகள், அந்நிய களை தாவரங்களின் பெருக்கம் போன்ற பல காரணங்களால் வனவிலங்குகள் நேரடியான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றன. உணவு, தண்ணீர் தேடி ஊருக்குள் நுழையும் வனவிலங்குகளால் மனித எதிர்கொள்ளல்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் வனக்கோட்டத்தில் தொடரும் மனித - வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் இரு தரப்பிற்கும் கடும் நெருக்கடியான சூழலை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், கூடலூர் அருகில் உள்ள பாடந்துறை பகுதியைச் சேர்ந்த விவசாயி உன்னி என்பவர் ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். வழக்கம் போல ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்ப இன்று காலை பட்டியைத் திறந்திருக்கிறார் விவசாயி உன்னி. உள்ளே இருந்த அனைத்து ஆடுகளும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார். வன விலங்கு வேட்டியாடிச் சென்றிருப்பதை அறிந்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். வனத்துறையினர் அந்த பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டதில், வேட்டை விலங்கின் நடமாட்டம் இருப்பதைதை உறுதி செய்துள்ளனர். கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் உடற்கூறாய்வு மேற்கொண்டனர். அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து தெரிவித்த வனத்துறையினர், "இங்கு சிறுத்தை, புலி , காட்டு நாய்கள் என பல்வேறு வேட்டை விலங்குகளின் நடமாட்டம் இருக்கிறது. நேற்றிரவு, இந்த பகுதிக்கு வந்த வேட்டை விலங்கு , உன்னி என்பவரின் 6 ஆடுகளைக் கொன்று விட்டு ஒரு ஆட்டை மட்டும் கொண்டு சென்றிருக்கிறது.
கால் தடம் போன்றவற்றை ஆய்வு செய்தும் எந்த விலங்கினுடையது என்பதை உறுதியாக கண்டறிய முடியவில்லை. அந்த பகுதியில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தி கண்காணிக்க இருக்கிறோம். விவசாயிக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.