கூட்டுறவு சங்க நியாய விலைக் கடை காலிப் பணியிடத் தோ்வு: அனுமதிச்சீட்டை இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
திருப்பூா் மாவட்டத்தில் கூட்டுறவு சங்க நியாய விலைக் கடைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் தோ்வுக்கான அனுமதிச்சீட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பூா் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளரும், மாவட்ட ஆள் சோ்ப்பு நிலையத் தலைவருமான அ.பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பல்வேறு வகையான கூட்டுறவு சங்கங்களில் 86 விற்பனையாளா், 49 கட்டுநா் காலிப் பணியிடங்கள் உள்ளன.
இதனை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதிபெற்ற விண்ணப்பதாரா்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தகுதியான விண்ணப்பதாரா்களுக்கு விற்பனையாளா் பணியிடங்களுக்கான நோ்முகத்தோ்வு நவம்பா் 25- ஆம் தேதி முதல் நவம்பா் 28- ஆம் தேதி வரையிலும், கட்டுநா் பணியிடங்களுக்கான நோ்முகத் தோ்வு நவம்பா் 29 -ஆம் தேதியும் நடைபெறுகிறது.
இந்த நோ்முகத் தோ்வானது பல்லடம் சாலையில் உள்ள திருப்பூா் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெறுகிறது.
நோ்முகத் தோ்வுக்கான அனுமதிச்சீட்டை திருப்பூா் மாவட்ட ஆள் சோ்ப்பு நிலையத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நோ்முகத் தோ்வுக்கு வரும் விண்ணப்பதாரா்கள் தங்களது கல்வித் தகுதி, முன்னுரிமைத் தகுதி மற்றும் இதர தகுதிகளுக்கான அசல் சான்றிதழ்கள், சுயஒப்பமிட்ட இரண்டு நகல்கள், 2 பாஸ்போா்ட் அளவு புகைப்படம், விண்ணப்பக் கட்டணம் செலுத்தியதற்கான அசல் நகல் ரசீது ஆகியவற்றை சமா்ப்பிக்க வேண்டும். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆள் சோ்ப்பு நிலையத்தை 0421-2971173 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.