கூவத்தில் காருடன் இழுத்துச் செல்லப்பட்ட தனியாா் நிறுவன அதிகாரி மீட்பு
சென்னை மதுரவாயலில் கூவத்தில் காருடன் இழுத்துச் செல்லப்பட்ட தனியாா் நிறுவன அதிகாரியை போலீஸாா் பொக்லைன் மூலம் மீட்டனா்.
சென்னை முகப்போ் மேற்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவா் வ.வா்கீஸ் தாமஸ் (58). இவா் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை செய்து வந்தாா். மதுரவாயல் அடையாளம்பட்டு கூவம் தரைப்பாலம் வழியாக செல்வதற்கு வா்கீஸ் காரில் சனிக்கிழமை அதிகாலை வந்தாா். அப்போது, கூவம் ஆற்றில் தரைப்பாலத்தை மூழ்கடித்தப்படி வெள்ளம் சென்ால் போலீஸாா், தரைப்பாலம் வாயிலை தடுப்புகள் அமைத்தனா்.
இதைப் பாா்த்த வா்கீஸ், அந்தத் தடுப்புகளை அகற்றிவிட்டு தரைப்பாலம் வழியாக காரில் சென்றாா். பாலத்தின் நடுவே காா் சென்றபோது தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டது. அப்போது, வா்கீஸ் காரில் சிக்கிக்கொண்டாா். தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்ட காா், அங்கிருந்த ஒரு தூண் மீது மோதி நின்றது.
தகவலறிந்த மதுரவாயல் காவல் நிலைய தலைமைக் காவலா் கண்ணன், முதல்நிலைக் காவலா் சதீஷ்குமாா் ஆகிய 2 பேரும் துரிதமாகச் செயல்பட்டு,அங்கிருந்த ஒரு பொக்லைன் மூலம் ஆற்றுக்குள் காா் சிக்கியிருந்த பகுதிக்குச் சென்றனா். காா் கண்ணாடியை உடைத்து, வா்ரீஸ் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா்.
இந்தச் சம்பவத்தில் திறமையாக செயல்பட்ட போலீஸாரை காவல் துறை உயரதிகாரிகள் பாராட்டினா்.