வடசென்னை வளா்ச்சித் திட்டப் பணிகள் மதிப்பீடு ரூ. 5,779 கோடியாக உயா்வு: அமைச்சா் ...
கேரளத்தில் அரசுக்கு எதிரான உணர்வு இல்லை: பினராயி விஜயன்!
கேரளத்தில் அரசுக்கு எதிரான உணர்வு மக்களுக்கு இல்லை என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளத்தின் வயநாடு மக்களவைத் தொகுதி மற்றும் செலக்கரா, பாலக்காடு சட்டபேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.
இதில் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்க காந்தி 6.22 லட்சம் வாக்குகள் பெற்று 4 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சத்யன் மோகேரி 2.11 லட்சம் வாக்குகள் மட்டுமே பெற்றார்.
சட்டப்பேரவைத் தொகுதிகளான செலக்கராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரும், பாலக்காட்டில் காங்கிரஸ் வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளனர்.
தேர்தல் முடிவுகள் தொடர்பாக கருத்து தெரிவித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், “சட்டப்பேரவை இடைத்தேர்தலில் எல்டிஎஃப் (இடதுசாரி ஜனநாயக முன்னணி) அரசுக்கு மக்களின் ஆதரவு அதிகரித்துள்ளது. பல்வேறு பொய் பிரசாரங்களை மீறியும் இந்த வெற்றியை மக்கள் வழங்கியுள்ளனர்.
பாலக்காடு தொகுதியில் எல்டிஎஃப் கூட்டணிக்கு முன்பைவிட அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. மதச்சார்பற்ற அரசியலை சமரசமின்றி நிலைநிறுத்துவதை இந்தத் தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன.
சர்ச்சைக்குரிய பொய்ப் பிரசாரங்களால் அரசின் மீது மக்களுக்கு எந்த எதிர்ப்பு உணர்வும் வரவில்லை என்பதையும் இந்த முடிவுகள் வெளிகாட்டுகின்றன.
இதையும் படிக்க | ஜார்க்கண்ட் வெற்றி: ஹேமந்த் சோரனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
வகுப்புவாத கட்சிகளுடன் இணைந்து எதிர்க்கட்சி பாலக்காட்டில் வெற்றி பெற்றிருந்தாலும், எல்டிஎஃப் கூட்டணிக்கு முந்தைய தேர்தல்களைவிட அதிக வாக்குகள் கிடைத்துள்ளன.
பாஜகவின் குற்றச்சாட்டுகளை மக்கள் முற்றிலுமாக நிரகரித்துள்ளனர். மக்களவைத் தேர்தலில் திரிச்சூரில் அவர்கள் வெற்றி பெற்றிருந்தாலும் அவர்களால் தற்காலிக ஆதாயங்களால் கேரளத்தில் நீண்ட நாள்கள் தாக்குப்பிடிக்க முடியாது.
வயநாடு மக்களவைத் தொகுதி மற்றும் பாலக்காடு சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றிபெற்றவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்தார்.