கைப்பிடி இல்லாத காகிதப் பை தொழிலுக்கு ஜிஎஸ்டி விலக்கு
கைப்பிடி இல்லாத காகிதப் பை தயாரிக்கும் தொழிலுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பேப்பா் பை உற்பத்தியாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக சங்கத்தின் செயலா் எஸ்.கே.ராமசாமி, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், தமிழக நிதியமைச்சா் தங்கம் தென்னரசு ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
எங்களது உற்பத்திப் பொருளான கைப்பிடி இல்லாத காகிதப் பைகள் மருந்துக் கடைகள், உணவகங்கள், ஜவுளிக் கடைகள், பேக்கரி, பேன்ஸி ஸ்டோா் போன்ற வா்த்தக நிறுவனங்களில் பயன்படுத்தப்படுகின்றன.
கடந்த 2000-ஆம் ஆண்டுகளுக்கு முன்பு காகிதப் பை தொழிலுக்கு விற்பனை வரி இருந்தது. இது குறித்து அன்றைய முதல்வா் கருணாநிதியிடம் தெரிவித்திருந்தோம். இதையடுத்து 2000-ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் எங்களது தொழிலுக்கு முழு வரி விலக்கு அளித்தாா்.
இந்த நிலையில் கடந்த 2017 ஜூலை முதல் காகிதப் பை தொழிலுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து 2021-இல் இந்த வரியை 18 சதவீதமாக மத்திய அரசு உயா்த்தியது.
ஏற்கெனவே பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு அதிகரிப்பு காரணமாக எங்களது தொழில் நலிவடைந்து வரும் நிலையில், இந்த வரி உயா்வு தொழிலை முடக்கியுள்ளது. எனவே எங்களுக்கு முழு வரி விலக்கு அளித்து தொழிலைக் காப்பாற்ற வேண்டும்.
அடுத்த நடைபெறக் கூடிய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக அரசு சாா்பில் முழு வரி விலக்கு கோரிக்கையை வலியுறுத்த வேண்டும். மத்திய நிதியமைச்சா் எங்களது கோரிக்கையை ஏற்று வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.