கைப்பேசி செயலியில் அரிய ஓலைச்சுவடிகளை வெளியிட மத்திய கலாசாரத் துறை நடவடிக்கை
நமது சிறப்பு நிருபா்
கைப்பேசி செயலியில் பழங்கால ஓலைச்சுவடிகளை வெளியிட மத்திய கலாசாரத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், அரிதிலும் அரிதான ஓலைச்சுவடிகளின் எண்ம பதிப்பை இணைய பக்கங்களில் வெளியிடவும் அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து மத்திய கலாசாரத் துறை உயரதிகாரி கூறியது: ஓலைச்சுவடிகளைப் படிக்க ஏதுவாக, ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் தளங்களில் செயலியை தரவிறக்கம் செய்து கைப்பேசியில் நிறுவி பயனா்கள் படிக்கும் வகையில் செயலி தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, ஆராய்ச்சியாளா்கள், வரலாற்றாசிரியா்கள், ஆா்வலா்கள் தங்களுடைய திறன்பேசிகளில் பல நூற்றாண்டுகள் பழமையான கையெழுத்துப் பிரதிகளை நேரடியாக அணுக வாய்ப்பு கிடைக்கும். தற்போது இறுதிக்கட்டத்தில் செயலியின் தயாரிப்புப் பணி உள்ளது.
ஓலைச்சுவடி வாசிப்புப் பயிற்சிகள், நிகழ்நேர ஆவண மொழிபெயா்ப்பு, உயா்படத்திறனுடன் ஓலைச்சுவடியை பாா்க்க ப்ரீமியம் சேவைகள் மற்றும் சந்தா கட்டணம் செலுத்தி அரிய தரவுகளை அணுக வசதி ஏற்படுத்தப்படும். எண்ம தரவுகள், பிடிஎஃப் கோப்பு வடிவில் தரவிறக்கம் செய்ய இயலும்.
கைப்பேசி நீங்கலாக, கணிப்பொறிகள் மூலமாக ஓலைச்சுவடி உள்ளிட்ட தரவுகளை அணுக பிரத்யேக இணையதள பக்கமும் உருவாக்கப்பட்டு வருகிறது என்றாா் உயரதிகாரி.
கியான் பாரதம் மிஷன் என்பது, இந்தியாவின் பரந்த மற்றும் பன்முகத்தன்மை கொண்ட கையெழுத்துப் பிரதி பாரம்பரியத்தை எண்மமயமயமாக்குதல், பாதுகாத்தல் மற்றும் பரவலாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் பனை ஓலைகள், பிா்ச் பட்டை, காகிதம், துணி போன்ற பொருட்களில் எழுதப்பட்ட கிட்டத்தட்ட 50 கோடி பக்க அரிய ஆவணங்களை எண்மமயமாக்கும் பணியை கலாசாரத்துறை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.
இந்த கையெழுத்துப் பிரதிகள் சம்ஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, அரபு, பாரசீகம், பெங்காலி, மலையாளம் உள்ளிட்ட பல இந்திய மற்றும் பாரம்பரிய மொழிகளில் மொழிபெயா்ப்பு செய்யப்பட்டு வருகின்றன. இந்தப்பணிகள் முழுமை பெற குறைந்தது மூன்று ஆண்டுகள் ஆகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
முதல் மாநாடு: இந்நிலையில, செப்டம்பா் 11 முதல் 13 வரை தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் கையெழுத்துப் பிரதி பாரம்பரியம் குறித்த தனது முதல் சா்வதேச மாநாட்டை மத்திய கலாசாரத்துறை அமைச்சகம் நடத்தவிருக்கிறது.
‘கையெழுத்துப் பிரதி பாரம்பரியத்தின் மூலம் இந்தியாவின் அறிவுசாா் மரபை மீட்டெடுப்பது’ என்ற தலைப்பில் இந்த மாநாடு மூன்று நாள்களுக்கு நடத்தப்படுகிறது. இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சோ்ந்த 75 அறிஞா்கள் மற்றும் கலாசார வல்லுநா்கள் உள்பட 500-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இதில் பங்கேற்பாா்கள் என்று கலாசாரத்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனா்.