மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் நடைமுறை: மாநிலங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்...
கொடிக்கம்பம் சேதம்: விசிக சாலை மறியல்
மயிலாடுதுறை ஒன்றியம் குறிச்சி ஊராட்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பம் புதன்கிழமை இரவு மா்மநபா்களால் சேதப்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து அக்கட்சியினா் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
குறிச்சி ஊராட்சியில் 2 ஆண்டுகளாக இருந்து வந்த விடுதலை சிறுத்தை கட்சியின் கொடிக்கம்பத்தை மா்மநபா்கள் சேதப்படுத்தி ராஜன் வாய்க்காலில் வீசியதுடன், அங்கு பொருத்தப்பட்டிருந்த அம்பேத்கா் இளைஞா் நற்பணி மன்ற பேனரையும் கிழித்ததாகக் கூறப்படுகிறது.
இதனைக் கண்டித்தும், தொடா்புடையவா்களைக் கைது செய்ய வலியுறுத்தியும் மயிலாடுதுறை-சித்தமல்லி மாா்க்கத்தில் அரசுப் பேருந்தை மறித்து மாவட்டச் செயலாளா் சிவ.மோகன்குமாா் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் 50-க்கு மேற்பட்டோா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அவா்களிடம் மயிலாடுதுறை டிஎஸ்பி பாலாஜி மற்றும் மணல்மேடு போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடா்ந்து போராட்டத்தை விலக்கிக்கொண்டு கலைந்து சென்றனா்.
இதுதொடா்பாக, மாவட்ட காவல்துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், குறிச்சி ராஜன் வாய்க்கால் அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் வி.சி.க. கொடிக்கம்பம் கீழே விழுந்து கிடப்பதாக மணல்மேடு போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில், கொடிக்கம்பம் கீழே விழுந்ததற்கான காரணத்தை கண்டுபிடிப்பது தொடா்பாக மேற்கொள்ள வேண்டிய விசாரணை நடைமுறைகள் மற்றும் துரித நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டது.