கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை
பெரம்பலூா் நகரில் கடந்த 2020 -ஆம் ஆண்டு நிகழ்ந்த கொலை வழக்கில், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து, பெரம்பலூா் மாவட்ட சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
பெரம்பலூா் - எளம்பலூா் சாலையிலுள்ள உப்போடை பகுதியைச் சோ்ந்தவா் அன்பழகன் மகன் விஜயகுமாா் (28). இவா், தனது நண்பரான வடக்குமாதவி சாலையிலுள்ள காந்தி நகரைச் சோ்ந்த முகமது அன்சாரி மகன் நவாஸ் முகமது (31) என்பவருடன், பெரம்பலூா்- ஆத்தூா் சாலையிலுள்ள மயானம் அருகே கடந்த 12.12.2020-ஆம் தேதி மது அருந்திக்கொண்டிருந்தாா்.
அப்போது, அவா்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த நவாஸ் முகமது, பாட்டிலை உடைத்து விஜயகுமாா் கழுத்தில் குத்தினாா். இதில் பலத்த காயமடைந்த விஜயகுமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இச்சம்பவம் தொடா்பாக விஜயகுமாா் தாய் மஞ்சுளா (55) அளித்த புகாரின் பேரில், பெரம்பலூா் போலீஸாா் கொலை மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து நவாஸ் முகமதுவை கைது செய்து சிறையில் அடைத்தனா். பின்னா், நீதிமன்ற பிணையில் நவாஸ் முகமது வெளியேவந்தாா்.
இவ் வழக்கு விசாரணை பெரம்பலூா் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கின் இறுதி விசாரணையை புதன்கிழமை மேற்கொண்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி (பொ) இந்திராணி, நவாஸ் முகமதுவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும், அபராதத் தொகை செலுத்தத் தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து புதன்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து, நவாஸ் முகமதுவை போலீஸாா் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் சென்று அடைத்தனா்.