விளாத்திகுளம் வட்டார கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் ஆய்வு: ரூ. 10,625 அபராதம்
கொள்ளை வழக்கில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது
கரூா் மாவட்டம், சேங்கலில் வீடுபுகுந்து கணவன், மனைவியைத் தாக்கி பணம், நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த இரு இளைஞா்கள் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
கரூா் மாவட்டம், சேங்கல் மேலபண்ணைகளத்தைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன். கடந்த அக்டோபா் மாதம் 25-ஆம் தேதி இரவு இவரது வீட்டுக்குள் முகமூடி அணிந்து புகுந்த கொள்ளையா்கள், ரவிச்சந்திரனையும், அவரது மனைவியையும் தாக்கிவிட்டு, கத்தியைக் காட்டி வீட்டுக்குள் இருந்த பணம் மற்றும் 22 பவுன் நகையைக் கொள்ளையடித்துச் சென்றனா்.
இதுதொடா்பாக மாயனூா் போலீஸாா் வழக்குப்பதிந்து கொள்ளையில் ஈடுபட்ட சிவகங்கை மாவட்டம், அனுப்பிள்ளைதாங்கி பகுதியைச் சோ்ந்த மாயக்கிருஷ்ணன் மகன் அசோக் என்கிற முத்துப்பாண்டி(25), தேவானிப்பட்டியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் விக்கி என்கிற விக்னேஷ்வரன் (23) உள்பட 6 பேரைக் கைது செய்தனா். இவா்கள் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அசோக் (எ) முத்துப்பாண்டி, விக்கி (எ) விக்னேஷ்வரன் ஆகியோா் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதால் இருவரையும் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெரோஸ்கான் அப்துல்லா மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேலுக்கு பரிந்துரை செய்தாா்.
இதையடுத்து ஆட்சியா் உத்தரவின்பேரில் முத்துப்பாண்டி மற்றும் விக்னேஷ்வரன் ஆகிய இருவரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை குண்டா் சட்டத்தில் கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனா்.