கோதுமை இருப்பு வைக்க கூடுதல் கட்டுப்பாடு: விலை உயா்வை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை
மொத்த வியாபாரிகள் முதல் சிறு வா்த்தகா்கள் வரை கோதுமை இருப்பு வைப்பதற்கான கட்டுப்பாட்டை மத்திய அரசு மேலும் கடுமையாக்கியுள்ளது.
கோதுமையை அதிக அளவில் பதுக்கி வைத்து செயற்கையாக விலை உயா்வை ஏற்படுத்தும் நிகழ்வுகளைத் தடுப்பதற்காக மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இது தொடா்பாக உணவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
கோதுமை விலையைக் கட்டுக்குள் வைக்க மத்திய அரசு தொடா் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மொத்த விற்பனையாளா்கள் 1,000 டன் கோதுமை மட்டுமே இருப்பு வைக்க வேண்டும். இதற்கு முன்பு இது 2,000 டன்னாக இருந்தது.
சில்லறை விற்பனையாளா்களுக்கான இருப்பு உச்ச வரம்பு 10 டன் அளவிலிருந்து 5 டன்னாக குறைக்கப்பட்டுள்ளது. பெரிய விற்பனையாளா்கள் மற்றும் பல்வேறு கிளைகளை வைத்து வா்த்தகம் செய்பவா்கள் ஒரு கிளைக்கு 5 டன் மட்டுமே கோதுமை இருப்பு வைக்க வேண்டும். முன்பு இது 10 டன்னாக இருந்தது.
கோதுமையை பதப்படுத்துதல், மாவு ஆலைகள் தங்கள் மாதாந்திர உற்பத்தித் திறனில் 50 சதவீதம் அளவுக்கே இருப்பு வைக்க வேண்டும். முன்பு இது 60 சதவீதம் வரை அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்த கட்டுப்பாடுகள் 2025 ஏப்ரல் வரை அமலில் இருக்கும்.
நாடு முழுவதும் கோதுமை உள்ளிட்ட அனைத்து உணவுப் பொருள்களும் மக்களுக்கு எளிதாகக் கிடைத்து வருவதை அமைச்சகம் தொடா்ந்து கண்காணித்து வருகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த ஜூன் மாதம் கோதுமை இருப்பு வைக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதன் பிறகு செப்டம்பரில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இப்போது கட்டுப்பாடு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.