கோலியைப் போலச் செய்வதை ஷுப்மன் கில் நிறுத்த வேண்டும்: மனோஜ் திவாரி
இந்திய டெஸ்ட் அணியின் தற்போதைய கேப்டன் ஷுப்மன் கில் முன்னாள் டெஸ்ட் கேப்டன் விராட் கோலியைப் போல் நடந்துகொள்வதை நிறுத்த வேண்டுமென மனோஜ் திவாரி கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் இங்கிலாந்து 2-1 என முன்னிலையில் உள்ளது.
இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் 3-ஆவது டெஸ்ட்டில் இங்கிலாந்து வீரரை ஆபசமாகப் பேசியதால் பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் உள்பட இங்கிலாந்து வீரர்கள் அபாரமாக செயல்பட்டு இந்தியாவை வீழ்த்தினார்கள்.
தேவையில்லாமல் பேசுவதால் ஷுப்மன் கில் பேட்டிங் மற்றும் அவரது தலைமைப் பண்பு கேள்விக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், முன்னாள் வீரர் மனோஜ் திவாரி ஸ்போர்ட்ஸ்பூம் டிவியில் கூறியதாவது:
ஆக்ரோஷத்தை வெல்வதில் காட்டுங்கள்
கேப்டன் ஷுப்மன் கில் நடந்துகொள்ளும் விதம் எனக்குப் பிடிக்கவில்லை. கடைசி டெஸ்ட்டில் அவர் விராட் கோலி போல நடந்துகொண்டார். அதன் விளையாவாக அவரால் பேட்டிங்கில் சிறப்பாக விளையாட முடியவில்லை.
கேப்டன் ஆனதும் ஷுப்மன் கில் நடததை சரியாக இல்லை. மிகவும் கோபமாக நடந்துகொள்கிறார். அதை கடந்த ஐபிஎல் போட்டிகளில் இருந்தே கவனித்து வருகிறேன்.
கோபமாக நடுவர்களுடன் பேசுகிறார். அது அவருடைய இயல்பும் அல்ல. அவர் அந்தமாதிரி கோபமடைய வேண்டியதில்லை, அதில் அவர் எதையும் நிரூபிக்கத் தேவையில்லை.
கில் அவருடைய பாணியில் ஆக்ரோஷமாக இருக்கலாம். அதற்காக அவர் ஆபசமாகப் பேச வேண்டியதில்லை. டெஸ்ட் போட்டிகளில் வெல்வதில் அதைக் காட்டலாம்.
இந்திய கேப்டன் இப்படி பேசக் கூடாது
இந்திய அணி எளிதாக 2-1 என ஆகியிருக்கலாம். அந்தமாதிரியான ஆக்ரோஷம் விளையாட்டுக்கு உதவாது. குறிப்பாக இந்திய அணியின் கேப்டனாக தேவையில்லாதது.
கில் பேசிய வார்த்தைகளில் எனக்கு விருப்பமில்லை. நீங்கள் இந்திய அணியை பிரதிநிதித்துவம் செய்கிறீர்கள்.
முன்னாள் கேப்டன் இப்படி பேசியதால் அதையே இவரும் டிரெண்ட் என நினைத்து செய்கிறார். ஆனால், இதைக் கட்டுப்படுத்தியே ஆக வேண்டும்.
நீங்கள் ஒன்றைப் பயன்படுத்தினால் அது அடுத்த தலைமுறைகளையும் பாதிக்கும் என்றார்.
இரு அணிகளுக்குமான 4-ஆவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நாளை (ஜூலை 23) தொடங்குகிறது.