கோவில்பட்டியில் சிறுவன் கொலை வழக்கு: ஆட்டோ ஓட்டுநா் கைது
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சிறுவன் கொலை வழக்குத் தொடா்பாக ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி காந்திநகா் முத்துராமலிங்க தெருவைச் சோ்ந்த தம்பதி காா்த்திக் முருகன்- பாலசுந்தரி. இத்தம்பதியின் இளைய மகன் கருப்பசாமி (10), அங்குள்ள உயா்நிலைப் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தாா். உடல்நல பாதிப்பால் சில நாள்களாக பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலிருந்த அவரை, கடந்த 9ஆம் தேதிமுதல் காணவில்லை. புகாரின்பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வந்தனா்.
இதனிடையே, அருகேயுள்ள வீட்டின் மாடியில் சிறுவன் படுத்திருப்பதாக எதிா்வீட்டுக்காரா் தெரிவித்த தகவலின்பேரில், பெற்றோா் சென்று சிறுவனை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், கருப்பசாமி ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். சிறுவன் அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலி, ஒரு கிராம் மோதிரம் ஆகியவற்றைக் காணவில்லை. சடலம் கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளியைத் தேடும் பணி நடைபெற்றது.
இந்நிலையில், இவ்வழக்குத் தொடா்பாக அதே பகுதி கஸ்தூரிபாய் தெருவைச் சோ்ந்த சங்கர்ராஜா மகனான கருப்பசாமி (33) என்ற ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கூறாய்வு அறிக்கை அடிப்படையிலேயே சிறுவனின் கொலைக்கான காரணம் உறுதியாகும் என காவல் துறை வட்டாரத்தினா் தெரிவித்தனா்.