ஜகதீப் தன்கர் கண்ணியத்திற்கு எதிராக நடந்துகொள்கிறார்: கார்கே குற்றச்சாட்டு!
கோவை: உக்கடம் மேம்பாலத்தில் பட்டம் விட்டு இளைஞருக்கு காயம் ஏற்படுத்திய விவகாரம்; 3 பேர் மீது வழக்கு!
கோவை மலுமிச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் கடந்த 7-ம் தேதி உக்கடம் ஆத்துப்பாலம் மேம்பாலத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென பறந்து வந்த ஒரு பட்டத்தின் நூல் கார்த்திக்கின் கழுத்தில் சுற்றியது. இதில் நிலை தடுமாறிய கார்த்திக் உடனடியாக தன் வாகனத்தை நிறுத்தி பட்ட நூலை எடுக்க முயற்சித்துள்ளார்.
அதில் கை மற்றும் கழுத்துப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்றுள்ளார். தொடர்ந்து இது குறித்து கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணனிடம் புகாரளித்தார்.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த ரியாஸ் (26), அசிம் பைசல் (20) மற்றும் அப்துல் ஹமீது (19) ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
பொது மக்களுக்கு காயம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினர்.
கடுமையான எச்சரிக்கைக்கு பிறகு கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களும் காவல் நிலையப் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.