நெருங்கும் புயல்; கொட்டித் தீர்க்கும் கனமழை; சென்னையைச் சூழும் வெள்ளநீர் - நிலவர...
கோவை உக்கடம் மேம்பாலத்தில் விரிசலா..? தீயாக பரவிய வீடியோ... - நெடுஞ்சாலைத்துறை விளக்கம்
பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு சாலைகளை இணைக்கும் வகையில் கோவை உக்கடம் – ஆத்துப்பாலம் பகுதியில் 3.8 கி.மீ தொலைவுக்கு, ரூ.470 கோடி மதிப்பில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் மாதம் திறந்து வைத்தார்.
பொதுவாக கோவையில் கட்டப்படும் பாலங்கள் அடிக்கடி சர்ச்சையில் சிக்கும். அந்த வகையில் உக்கடம் பாலத்தில் திறக்கப்பட்ட மேம்பாலம், சில மாதங்களிலேயே விரிசல் விட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இதுதொடர்பான வீடியோ ஒன்றும் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை வெளியிட்டுள்ள விளக்கத்தில், “உக்கடம் – ஆத்துப்பாலம் மேம்பாலத்தின் கரும்பு கடை பகுதியில் பாலத்தில் விரிசல் என சமூக வலைதளங்களில் பரவும் செய்தி முற்றிலும் தவறானது.
இன்று காலை அந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது தூண் எண் NP17-ல் பாலத்தின் மேல் பகுதியில் பதிக்கப்பட்டுள்ள ஸ்ட்ரிப்சீல் எக்ஸ்பான்ஷன் ஜாயிண்ட் (Strip seal Expansion Joint) நல்ல முறையில் உள்ளது.
பாலத்தின் கீழ்பகுதியில் தெர்மாகோல் அட்டை வைத்து, டெக்ஸ்லாப் கான்கிரீட் போடப்படும் பொழுது மீதமுள்ள சிமெண்ட் கலவை தெர்மாகோல் அட்டைக்கு கீழ்ப்பகுதியில் ஒட்டியுள்ளது. அது தற்போது பெயர்ந்து கீழே விழுந்துள்ளது
இதனால் பாலப்பகுதியில் உள்ள கட்டுமானங்களுக்கு எவ்வித சேதாரமும் இல்லை. எனவே மக்கள் அச்சப்பட தேவையில்லை. அந்தப் பகுதியை சுத்தம் செய்து தருமாறு ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.” என்று கூறியுள்ளனர்.