``சகோதரர்கள் துரோகம், போலீஸார் தூண்டுதல்; காதலன் கொலைக்கு காரணம்'' - பாதிக்கப்ப...
``சகோதரர்கள் துரோகம், போலீஸார் தூண்டுதல்; காதலன் கொலைக்கு காரணம்'' - பாதிக்கப்பட்ட பெண் வேதனை
மகாராஷ்டிரா மாநிலம் நாண்டெட்டில் காதல் திருமணம் செய்து கொள்ள இருந்த அச்சல் (20) என்ற பெண்ணின் காதலனை அவரது உறவினர்கள் படுகொலை செய்தனர்.
இதையடுத்து தனது காதலன் உடல் முன்பு நெற்றியில் குங்குமம் வைத்து காதலன் உடலையே அப்பெண் திருமணம் செய்து கொண்டதாக கூறினார். இக்கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இக்கொலை தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த பேட்டியில், தனது பெற்றோர் நம்ப வைத்து துரோகம் செய்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அச்சல் அளித்த பேட்டியில்,
'' எனது காதலன் சக் ஷாமும் நானும் திருமணம் செய்து கொள்ள எனது பெற்றோர் சம்மதம் தெரிவித்து இருந்தனர். நாங்கள் மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தோம். எங்கள் வாழ்க்கை குறித்து பல கனவு கண்டோம்.
எங்களது திருமணத்தை ஏற்றுக்கொள்வதாக எனது சகோதரர்களும் உறுதியளித்தனர். ஆனால் கடைசி நேரத்தில் துரோகம் செய்துவிட்டனர். சக்ஷாம் எனக்கு இன்ஸ்டாகிராம் மூலம் தான் அறிமுகமானார். எனது சகோதரர்கள் மூலம் அறிமுகமாகவில்லை.
எனது குடும்ப உறுப்பினர்கள் அடிக்கடி சக்ஷாமுடன் வெளியில் சுற்றுவது வழக்கம்.
ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டிருக்கின்றனர். இது போன்று நடக்கும் என்று நாங்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை.
ஒரு முறை சக்ஷாமிடம் எனது தந்தை, எனது மகளை திருமணம் செய்வதாக இருந்தால் இந்து மதத்திற்கு மாறவேண்டும் என்று சொன்னார்.
சக்ஷாமும் தான் இந்து மதத்திற்கு வருவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்தார். எனக்காக அனைத்திற்கும் தயாராகவே இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது.

சம்பவம் நடந்த அன்று என்னை எனது சகோதரன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று சக்ஷாமிற்கு எதிராக புகார் செய்யும்படி கேட்டுக்கொண்டார். நான் அதற்கு மறுப்பு தெரிவித்தேன்.
அங்கிருந்த போலீஸார் தீரஜ், மஹீத் ஆகியோர்தான் எனது சகோதரனிடம் கொலை செய்யும்படி தூண்டினர். போலீஸார் இருவரும் அடிக்கடி கொலை செய்துவிட்டு இங்கு வருகிறீர்கள், உங்கள் சகோதரியோடு தொடர்புடைய நபரை மட்டும் ஏன் கொலை செய்யவில்லை? என்று கேட்டனர்.
அதற்கு எனது சகோதரன் கொலை செய்துவிட்டு மாலையில் வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றான்.
போலீஸார் இது போன்று நடந்து கொண்டால் எப்படி பொதுமக்கள் அவர்களை நம்புவார்கள். எனக்கு எனது வீட்டு கதவு மூடப்பட்டுவிட்டதாக எனது குடும்பத்தினர் கூறிவிட்டனர். இந்தக் கொலை ஜாதி காரணமாக நடந்தது.
என் அப்பாவும், தம்பிகளும், 'நாங்கள் கேங்க்ஸ்டர். இது சக்ஷாமுக்குத் தெரியும். அப்படி இருக்கும்போது அவர் எப்படி எங்கள் வீட்டு பெண்ணிடம் பேசத் துணிவார்' என்று சொல்கிறார்கள்.
என்னை சக்ஷாம் குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டனர். எனது வாழ்நாள் முழுவதும் சக்ஷாம் வீட்டில் தங்கிக்கொள்வேன். மக்கள் சாதிப்படுகொலையில் ஈடுபடக்கூடாது'' என்று தெரிவித்தார்.

சம்பவம் நடந்த அன்று மாலை சக்ஷாம் தனது நண்பர்களுடன் நின்று பேசிக்கொண்டிருந்தார். அந்நேரம் எனது சகோதரன் ஹிமேஷ் அவருடன் சென்று வாக்குவாதம் செய்தார். வாக்குவாதம் சண்டையாக மாறியது.
இதில் ஹிமேஷ் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து சக்ஷாமை சுட்டார். அதன்பிறகு ஒரு டைய்ல்ஸ் எடுத்து அதனை கொண்டு சக்ஷாம் தலையில் அடித்து கொலை செய்தார். இக்கொலை தொடர்பாக ஹிமேஷ் உட்பட மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.















