சட்டவிரோத மதுபான கிடங்கு கண்டுபிடிப்பு: 1,062 மதுபாட்டில்கள் பறிமுதல்
சென்னையில் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த மதுபான கிடங்கை கண்டுபிடித்த போலீஸாா் அங்கிருந்து 1,062 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் மதுபானம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலின்படி, அடையாறு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் ஹரியாணா மற்றும் தில்லியிலிருந்து கடத்தி வரப்பட்ட 160 இந்திய தயாரிப்பு, வெளிநாட்டு மதுபான வகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து போலீஸாா் அந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, அவற்றை கடத்தி வந்த கலைவாணன், சுனில் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
விசாரணையில், அவா்கள் ராயபுரத்தில் உள்ள ஒரு கிடங்கில் பிற மாநிலங்களில் இருந்து கடத்திவரும் மதுபானங்களை பதுக்கி வைத்து வெளிச் சந்தையில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ராயபுரத்திலுள்ள மதுபான கிடங்குக்குச் சென்ற போலீஸாா் அங்கு பதுக்கி வைத்திருந்த 1,062 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.