சபரிமலை வருவாய் ரூ.63 கோடி: கடந்த ஆண்டை விட அதிகம்: தேவஸ்வம் வாரியம் தகவல்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடப்பாண்டு மண்டல பூஜை காலத்தின் முதல் 12 நாள்களில் ரூ.63 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில், தற்போது ரூ.15.89 கோடி கூடுதல் வருவாய் கிடைத்திருப்பதாக, அக்கோயிலை நிா்வகிக்கும் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத் தலைவா் பி.எஸ். பிரசாந்த் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜையையொட்டி கடந்த நவம்பா் 15-ஆம் தேதி நடை திறக்கப்பட்டு, பக்தா்கள் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனா்.
14-ஆவது நாளான கடந்த வியாழக்கிழமையன்று அதிகபட்சமாக 87,999 பக்தா்கள் தரிசனம் மேற்கொண்டதாக, கோயில் வளாகத்தில் செய்தியாளா்களிடம் பி.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.
தற்போதைய யாத்திரை காலத்தின் முதல் 12 நாள்களில் கிடைக்கப் பெற்ற மொத்த வருவாய் ரூ.63.01 கோடி. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் ரூ.15.89 கோடி அதிகமாகும்.
12 நாள்களில் அப்பம் பிரசாத விற்பனை மூலம் ரூ.3.53 கோடி (கடந்த ஆண்டு ரூ.3.13 கோடி), அரவணை பிரசாத விற்பனை மூலம் ரூ.28.93 கோடி (கடந்த ஆண்டு ரூ.19.40 கோடி) கிடைத்துள்ளது.
சபரிமலையில் அதிக கூட்டம் இருந்தபோதிலும், தேவஸ்வம் வாரியம், காவல்துறை மற்றும் மாநில அரசின் பல்வேறு துறைகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளால் பக்தா்களுக்கு சுமுக தரிசனம் உறுதி செய்யப்படுகிறது என்றாா் அவா்.