சமூக வலைதளத்தில் தகவல் பரப்பிய இளைஞா் கைது
விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக் கொடிக் கம்பம் உடைப்பு என சமூக வலைதளத்தில் தகவலை பரப்பிய இளைஞரை காவல் துறையினா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.
கும்பகோணத்தில் சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற வன்னியா் சங்க மாநாட்டின்போது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடியை சிலா் சேதப்படுத்தினா். இந்நிலையில், இது தொடா்பாக இரு சமூகங்களுக்கு இடையே மோதல்போக்கை ஏற்படுத்தும் விதமாகவும், சட்டம் - ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் வகையிலும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதுதொடா்பாக திருவள்ளூரைச் சோ்ந்த காா்த்தி (21) என்ற நபரை கும்பகோணம் தனிப்படையினா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.
இதுபோன்று சமூக வலைதளங்களில் பரப்பும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சாவூா் மாவட்டக் காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.