``சர்தார் படேல் மீது மரியாதை இருந்தால், மோடி RSS-ஐ தடைசெய்ய வேண்டும்'' - கார்கே காட்டம்
சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்தநாளான இன்று பிரதமர் மோடி குஜராத்தில் இன்று (அக்டோபர் 31) அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
மேலும், தேசிய ஒற்றுமை தினமாகக் கொண்டாடப்படும் படேலின் பிறந்த நாள் உரையில், காங்கிரஸ் அவரின் கொள்கைகளை மறந்து சுயநலத்துடன் செயல்பட்டதாக மோடி விமர்சித்தார்.

இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பைத் தடை செய்ய வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, ``வெளிப்படையாகச் சொல்கிறேன், ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப்பட வேண்டும். இவை எனது தனிப்பட்ட கருத்துகள்தான்.
இருப்பினும், சர்தார் வல்லபாய் படேலின் கருத்துகளை உண்மையிலேயே மோடி மதிக்கிறார் என்றால், ஆர்.எஸ்.எஸ்-ஐ தடை செய்யும் முடிவை அவர் எடுக்க வேண்டும்.
நாட்டிலுள்ள எல்லாத் தவறுகளுக்கும், சட்டம் ஒழுங்கு பிரச்னைகளுக்கும் பா.ஜ.க-வும், ஆர்.எஸ்.எஸ்ஸும்தான் காரணம்" என்று கூறினார்.
மேலும், வல்லபாய் படேல் குறித்துப் பேசிய கார்கே, ``காந்தியின் மரணத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மகிழ்ச்சியடைந்த விதத்திற்குப் பிறகு, அவர்களைத் தடை செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று சியாமா பிரசாத் முகர்ஜிக்கு படேல் கடிதம் எழுதினார்.
ஆர்.எஸ்.எஸ் உரைகள் விஷம் நிறைந்தவை. காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு அவர்கள் இனிப்புகளை விநியோகித்தனர். இந்தக் கடிதத்தை கோல்வால்கருக்கும் படேல் எழுதினார்" என்று கூறினார்.

சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேல், 1948-ல் காந்தி மறைவுக்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைத் தடை செய்தார்.
அதன்பின்னர், 1975-ல் எமெர்ஜென்சியின்போது அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியாலும், 1992-ல் பாபர் மசூதி இடிப்பின்போது அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவாலும் ஆர்.எஸ்.எஸ் தடைசெய்யப்பட்டது.
இருப்பினும் தற்போது எந்தத் தடையும் இல்லாத ஆர்.எஸ்.எஸ், டெல்லியில் அக்டோபர் 1-ம் தேதி தனது நூற்றாண்டு விழா கொண்டாடியதும், அதில் தலைமை விருந்தினராக பிரதமர் மோடி கலந்துகொண்டதும் குறிப்பிடத்தக்கது.


















