இந்தியாவிலிருந்து 8,000 கோடி டாலருக்கு ஏற்றுமதி: அமேஸான் இலக்கு
சாதனையா? சோதனையா? புஷ்பா - 2 திரை விமர்சனம்
நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்புடன், வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனை படைக்கப்போகும் படமாக எதிர்பார்க்கப்படும் புஷ்பா - 2 திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. உண்மையில் புஷ்பா சாதித்தாரா அல்லது சோதிக்கிறாரா? சுருக்கமாகப் பார்க்கலாம்…
இந்தப் படத்தின் Spoiler இல்லாத ஒன் லைன் என ஒன்றைச் சொல்லவேண்டுமெனில், மிகவும் எளிதுதான். முதல் பாகத்தில் சந்தன மரக் கடத்தலில் Pro-வாக மாறிய புஷ்பா, இரண்டாம் பாகத்தில் மேலும் எவ்வளவு வளர்கிறார்! என்பது மட்டும்தான். பணத்தில் உயர்ந்து, அரசியலில் கைவைத்து எங்கெல்லாம் பூந்து விளையாடுகிறார் என்பதுதான் உண்மையில் முக்கால்வாசிக் கதை!
புஷ்பா-1 ஒரு சில நெகட்டிவ் பாகங்களைக் கொண்டிருந்தாலும் நல்ல கமர்ஷியல் படமாக வெற்றியைப் பதிவு செய்தது. அல்லு அர்ஜுனின் நடிப்பும், சமந்தாவின் அந்த ஒரு பாடலும் படம் ரீச் ஆவதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று. இந்த இரண்டாம் பாகத்திலும் முதல்பாகத்தை வெற்றி பெறச் செய்த விஷயங்கள் இடம்பெற்றுள்ளது சிறப்பு. எனினும் தமிழ் ரசிகர்களால் பொறுக்க முடியாத சில விஷயங்களும் படத்தில் இருக்கத்தான் செய்கின்றன.
புஷ்பா- 2வின் முதல் பாதி புஷ்பாவின் வளர்ச்சி, அவரது அடுத்த நோக்கம், அதை நோக்கிய ஓட்டம் எனப் படம் நல்லபடியாக நகர்கிறது. இடைவேளைக் காட்சிகள் நல்ல கமர்ஷியல் எழுத்தால் ரசிக்கும்படியாக உள்ளதால் ரசிகர்களின் விசிலுக்குப் பஞ்சமில்லை. எனினும் அந்த INTERVEL-ஐ நோக்கிய பயணத்தில் வரும் சில பில்டப் வசனங்கள் கதிகலங்க வைக்கின்றன. இது ஒரு தெலுங்கு படம் என்பதை மனதில் வைத்துக்கொண்டால் அதையும் கடந்து செல்லமுடியும்.
புஷ்பாவின் வரலாறு காணாத அளவிலான சந்தனக் கடத்தல் எப்படி காவல்துறையைக் கடந்து சாத்தியமாகிறது என்பதில் புதிய உத்திகள் எதுவும் இல்லாதது சிறிய ஏமாற்றம். அது மிகப்பெரிய திட்டம் என்பது பின்னணி இசையில் மட்டுமே தெரிகிறது. அதிலும் ஹீரோவுக்கு மற்ற கதாப்பாத்திரங்கள் ஏற்றும் பில்டப்புகள், நினைத்த அளவுக்கு பெரிதாக உதவாதது அடுத்த ஏமாற்றம்!! “எல்லாரும் சூனாப் பானா ஆயிர முடியுமாடா” என கேஜிஎப் ரசிகர்கள் சிலிர்த்துக்கொள்கிறார்கள்.
முக்கியமாக அல்லு அர்ஜூன் - ராஷ்மிகா இடையேயான காதல்காட்சிகளில் சில இடங்களே ரசிக்கும்படியாக உள்ளன. ஃபகத் பாசில் தனது கதாப்பாத்திரத்திற்கு ஆழம் கொடுக்கும் வகையில் நன்றாக நடித்துள்ளார். இடைவேளைக் காட்சியில் அவரது வசனங்களுக்கு சிரிப்பலைகள் அரங்கை நிறைக்கின்றன. இருந்தாலும் அவரது கதாப்பாத்திரத்தை இன்னும் நன்றாக எழுதியிருக்கலாம் என அனைவருக்கும் தோன்றியிருக்கும். சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் கதைக்கேற்ற நடிப்பை வழங்கியிருக்கின்றனர். சுனிலுக்கு முதல் பாகத்தைவிட இதில் நேரமும் முக்கியத்துவமும் குறைவுபோல் தெரிந்தாலும் அவரது சில காட்சிகளும் அழுத்தமாக உள்ளன.
ஆனால் இரண்டாம் பாதியில் கதை சட்டென முடிந்துவிடுகிறது. இடைவேளையில் போடப்பட்ட கேள்விக்கு கொஞ்ச நேரத்திலேயே விடை கிடைத்துவிட, மீத நேரத்தை என்ன செய்வதெனத் தெரியாமல் “போடு ஒரு பாச ஊசிய” எனக் குடும்பக்கதை பக்கம் சட்டென சாய்ந்துவிடுகிறார் புஷ்பா. அதிலும் சென்ட்டிமென்ட்டாக சேலை கட்டி அவ்வளவு நேரம் நடனமாடிக்கொண்டே இருக்க "அவன யாராச்சும் நிறுத்துங்கடா” என திரையரங்கிற்குள்ளேயே கமெண்ட் அடித்து சிரிக்கிறார்கள் ரசிகர்கள்.
அந்தச் சேலை கட்டி ஆடும் காட்சிகளின் நோக்கம் செல்லுபடியாகும் நோக்கமாக இருந்தாலும், அதற்கான மீட்டரில், சரியான அளவில் அதைக் காட்டாமல் சாமி வந்து ஆடுவதுபோல் காட்டி, நடுவில் இரண்டு Western Stepகளும் போட்டு குளறுபடியாகக் காட்டப்பட்டது பார்வையாளர்களை ஒன்றவிடாமல் தடுக்கிறது. இதில் மட்டுமல்லாமல் பல காட்சிகளில் இப்படித்தான் மீட்டரை மிஞ்சி மிரள வைத்துள்ளார் இயக்குநர் சுகுமார்.
ஆனால் முக்கியமாக குறிப்பிட வேண்டிய விஷயமாக சில வசனங்களும், காட்சிகளும் சுகுமாரின் எழுத்தில் இருப்பது பாராட்டுதலுக்குரியது. தந்தை இல்லாத புஷ்பா குடும்பப் பெயருக்காக ஏங்குவதும், மனிதனை மதிக்காத ஒரு குடும்பத்தின் பெயர் உனக்கு வேண்டாமென ராஷ்மிகா பேசுமிடங்களும் தனியாகத் தெரிகின்றன.
மற்ற டப்பிங் படங்களில் கதாப்பாத்திரங்களோட ஒட்டாமல் அந்நியமாகத் தெரியும் குரல்கள்போல் இந்தப் படத்தில் தெரியாததற்கு தமிழில் வசனமெழுதியுள்ள மதன் கார்க்கியை பாராட்டியே ஆகவேண்டும். அவரது இயல்பான வசனங்கள் இதை ஆல்மோஸ்ட் தமிழ் படமாகவே காட்டுகின்றன.
இந்தப் படத்திற்கு ஆரம்பத்தில் லேசாக பலம் சேர்த்த பின்னணி இசை, போகப் போக சற்றுத் தடுமாறியது எளிதில் கண்ணில் படும்படியாக இருக்கிறது.
முக்கியமாக படம் முழுக்க சண்டைகள் நடந்துகொண்டே இருக்கின்றன. அந்த சண்டைகளும் ரொம்ப நேரம் நடக்கின்றன. இதனை இவ்வளவு அழுத்திச் சொல்ல படத்தின் மூன்றரை மணிநேரம்தான் காரணம். எல்லா சண்டைக் காட்சிகளையும் ஓரளவுக்குக் குறைத்தாலும் படத்தின் நீளம் கணிசமான அளவிற்குக் குறைந்துவிடும். ஆனால் பலரை அடித்துக்கொண்டே இருப்பதும், நான்கு பேருக்கு ஒருமுறை தாடியை நீவிவிடுவதும் சற்று சலிப்பை ஏற்படுத்திவிடுகின்றன.
பீலிங்ஸ் எனும் பாடலில் வரும் நடனம்கூட லேசாக முகம் சுழிக்கும் வகையில் உருவாகியிருப்பது வினோதம்தான். கிஸிக் எனும் பாடலில் வந்துபோகும் ஸ்ரீலீலா படுத்துக்கிடந்த பார்வையாளர்களை நிமிர்ந்து உட்கார வைக்கிறார். இருந்தாலும் முதல்பாகத்தில் “உஉ சொல்றீயா” எனக் கேட்டு எல்லோரையும் எழுந்து ஆட வைத்த சமந்தா ஓரமாக நின்று “சூனா.. பானா” டயலாக்கை மீண்டும் சொல்கிறார்..
இரண்டாம் பாதியே கதை இல்லாமல் திணறுகிறதே என நாம் தப்புக்கணக்குப் போடும்போதுதான் வருகிறது மிகப்பெரிய டுவிஸ்ட் "புஷ்பா - 3 தி ராம்பேஜ்”
ஆனால் ஒளிப்பதிவும், எடிட்டிங்கும், அனைவரின் நடிப்பும் உழைப்பும் பாராட்டுதலுக்குரியது என்பதில் சந்தேகமில்லை. Making-ல் பல இடங்களில் இந்திய சினிமாவின் தரம் உயர்ந்துவருகிறது என்பது கண்ணில் படாமலில்லை. உருவாக்கத்தில் புஷ்பா - 2 வெற்றி கண்டுள்ளது என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை.
ஓவராலாக பார்த்தால் கமெர்ஷியல் விரும்பிகள் கூட்டத்தில் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் கண்டிப்பாக இந்தப் படத்தைத் திரையில் கண்டுகளிக்கலாம். நல்ல கமெர்ஷில் அனுபவமாக இருக்கும். ஆனால் முதல் பாகமே ஓக்கேதான் என்பவர்களும் அல்லு அர்ஜூனின் ஒற்றைத் தோளைத் தூக்கி நடக்கும் கதாப்பாத்திரம் பிடிக்காதவர்களுக்கும் இந்தப் படம், பெரிய பட்ஜெட்டில் உருவாகி தோல்வியடையும் படங்களில் ஒன்றாகத்தான் இருக்கும்.