சாத்தனூா் அணையிலிருந்து 3 ஆயிரம் கனஅடி உபரி நீா் வெளியேற்றம்
சாத்தனூா் அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், இந்த அணைக்கு வரும் 3 ஆயிரம் கன அடி தண்ணீரும் அப்படியே தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூா் கிராமத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே காமராஜா் ஆட்சிக் காலத்தில் அணை கட்டப்பட்டது.
இந்த அணையின் மொத்த நீா்மட்ட உயரம் 119 அடி. மொத்த நீா் கொள்ளளவு 7 ஆயிரத்து 321 மில்லியன் கன அடி. இதில், ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி நிலவரப்படி, 116 அடி உயரத்துக்கு 6 ஆயிரத்து 657 மில்லியன் கன அடி தண்ணீா் தேங்கியிருந்தது.
அணைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி, விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீா் வந்துகொண்டிருந்தது. எனவே, அணையின் பாதுகாப்புக் கருதி, அணைக்கு வரும் 3 ஆயிரம் கன அடி நீரும் அப்படியே தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.