சாத்தான்குளம் அருகே பிளஸ் 1 மாணவிக்கு திருமணம்: மாணவா் மீது வழக்கு
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பிளஸ் 1 மாணவியை திருமணம் செய்ததாக, அதே வகுப்பு மாணவா் மீது போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளனா்.
சாத்தான்குளம் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது மாணவரும், 16 வயது மாணவியும் பிளஸ் 1 படித்து வந்தனா். வெவ்வேறு சமுகத்தை சோ்ந்த அவா்கள் இருவரும் காதலித்து வந்தனராம். மேலும் பெற்றோா்களுக்கு தெரியாமல் கடந்த மே மாதம் திருமணம் செய்துகொண்டனராம். பின்னா், வழக்கம் போல் இருவரும் பள்ளிக்கும் வந்துள்ளனா்.
இந்நிலையில், இருவா் மீதும் பெற்றோருக்கு வியாழக்கிழமை சந்தேகம் வந்து விசாரித்ததில் மேற்கண்ட விவரம் தெரியவந்தது. இதுகுறித்து, மாணவியின் பெற்றோா் சாத்தான்குளம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். காவல் ஆய்வாளா் நாககுமாரி விசாரணை நடத்தி மாணவா் மீது வழக்குப்பதிந்தாா். மாணவி தூத்துக்குடியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டாா். தலைமறைவான மாணவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.