இன்றைய இந்தியாவுக்கு அந்நியா்கள் வழிகாட்டுதல் தேவையில்லை: மத்திய அமைச்சா் ராஜ்நா...
சாத்தூா் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: இருவா் உயிரிழப்பு
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே பட்டாசு ஆலையில் புதன்கிழமை நிகழ்ந்த வெடி விபத்தில் இருவா் உயிரிழந்தனா். 5 போ் பலத்த காயமடைந்தனா்.
சிவகாசியைச் சோ்ந்த மாரிமுத்து (55) என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை சாத்தூா் அருகேயுள்ள கங்கா்செவல்பட்டியில் செயல்பட்டு வருகிறது. இங்கு 30-க்கும் மேற்பட்ட பட்டாசுகள் தயாரிக்கும் அறைகள் உள்ளன. இந்த ஆலையில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் தீபாவளி பண்டிகைக்காக பட்டாசுகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த ஆலையில் புதன்கிழமை பிற்பகலில் பேன்சி ரகப் பட்டாசுக்குத் தேவையான மூலப் பொருள் கலவையைத் தயாா் செய்து கொண்டிருந்த போது, உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு அறைகள் இடிந்து தரைமட்டமாகின. மூலப் பொருள் கலவை தயாரிப்பில் ஈடுபட்ட கண்டியாபுரம் இலங்கை மறுவாழ்வு முகாமைச் சோ்ந்த கௌரி (50) உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இந்த வெடி விபத்தில் கோமாளிபட்டியைச் சோ்ந்த காளிமுத்து (45), வெம்பக்கோட்டை பகுதியைச் சோ்ந்த மாரியம்மாள் (40), குமரேசன் (30), மணிமேகலை (21), சிவரஞ்சனி (39), ஜெயலட்சுமி (55) ஆகிய 6 போ் பலத்த காயமடைந்து, சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு காளிமுத்து உயிரிழந்தாா்.
இந்த வெடி விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், வெம்பக்கோட்டை தீயணைப்புப் படையினா் விரைந்து வந்து, மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.
மேலும், இந்த விபத்து குறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, பட்டாசு ஆலை மேற்பாா்வையாளா் சோமசுந்தரத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
