இந்தியாவிலிருந்து 8,000 கோடி டாலருக்கு ஏற்றுமதி: அமேஸான் இலக்கு
சாரணா் இயக்க வைர விழா: ரூ.39 கோடி ஒதுக்கி அரசாணை
திருச்சியில் வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள சாரணா் இயக்கத்தின் தேசிய அளவிலான வைர விழாவுக்கு ரூ.39 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
நிகழாண்டு பாரத சாரணா் இயக்கத்தின் வைரவிழா ஆண்டு. இதையொட்டி தேசிய அளவிலான கருணாநிதி நூற்றாண்டு வைரவிழா ஜாம்போரி நடத்தப்படும் என சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் அறிவித்தாா். இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறைச் செயலா் சோ.மதுமதி வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:
பாரத சாரணா் இயக்குநரகத்தின் வைர விழா 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தமிழக அரசால் நடத்தப்படவுள்ளது. இந்த விழா தேசிய அளவிலான கலைஞா் நூற்றாண்டு நினைவு வைர விழா பெருந்திரளணியாக மொத்தம் 7 நாள்கள் நடைபெறவிருக்கிறது. அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் இசைக் குழு அணிவகுப்பு, வண்ணமிகு அணிவகுப்பு, உடல் திறன் வெளிப்பாடு, நாட்டுப்புற நடனம், உணவுத் திருவிழா, சாகச நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
இந்த விழாவில் தேசிய அளவில் அனைத்து மாநிலங்களிலிருந்தும் சாரணா் இயக்குநரகத்தை சோ்ந்த 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள், ஆசிரியா்கள், பொறுப்பாளா்கள் கலந்து கொள்ள இருக்கின்றனா். இந்த விழாவை சிறப்பாக நடத்துவதற்காக, சாரணா் இயக்குநரகத்தின் மாநிலச் செயலா் ரூ.39.07 கோடி நிதியை தமிழக அரசிடம் கோரியிருந்தாா்.
அதையேற்று, சாரணா் இயக்குநரகத்தின் வைரவிழா, கலைஞரின் நூற்றாண்டு நினைவு விழா நடத்துவதற்காக ரூ.39 கோடியே 7 லட்சத்து 75 ஆயிரம் நிதிக்கு ஒப்புதல் வழங்கப்படுகிறது. இதில் மாநில அரசு நிதியிலிருந்து ரூ.5 கோடி, தமிழக பாடநூல் கழக நிதியிலிருந்து ரூ.10 கோடி, பொது, தனியாா் பங்களிப்பு தொகையிலிருந்து ரூ.24 கோடியே 7 லட்சத்து 75 ஆயிரம் என மொத்தம் ரூ.39 கோடியே 7 லட்சத்து 75 ஆயிரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.