கனமழை: குற்றாலம் பேரருவி வெள்ளப்பெருக்கில் சிக்கி 3 வயது குட்டி யானை பலி!
சாலை விபத்துகள் அதிகம் நிகழும் மாநிலங்கள்: தமிழகத்தில் விபத்துகள் அதிகரிப்பு!
புது தில்லி: சாலை விபத்துகளால் ஒவ்வொரு ஆண்டும் 1.78 லட்சம் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அவற்றுள் 60 சதவிகிதம், 18-34 இடையிலான வயதுக்குட்பட்டோர் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், வெள்ளிக்கிழமை(டிச. 13) கூட்டத்தொடரின்போது பேசிய அமைச்சர் நிதின் கட்கரி, 2024-ஆம் ஆண்டு இறுதியில், விபத்துகள் மற்றும் அவற்றால் ஏற்படும் உயிரிழப்புகள் 50 சதவிகிதம் குறைக்கப்படும் என்று தான் அமைச்சராகப் பதவியேற்றபோது தெரிவித்திருந்ததை குறிப்பிட்டுப் பேசினார். இந்த நிலையில், “சாலை விபத்துகள் அதிகரித்திருப்பதை வெளிப்படையாக ஏற்றுக்கொள்வதில் எனக்கு எவ்வித தயக்கமுமில்லை. இந்த ஒன்றில், எங்கள் துறையால்(போக்குவரத்து துறை) வெற்றியை அடைய முடியவில்லை.
சிலர் தலைக்கவசம் அணிவதில்லை. சாலையில் சிவப்பு விளக்கு காட்டப்பட்டாலும் சிலர் அதை கண்டுகொள்ளாமல் கடந்து செல்கின்றனர். முக்கியமாக, சாலைகளில் லாரிகள் முறையாக அவற்றுக்குரிய இடங்களில் நிறுத்தி வைக்கப்படாமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்படுவதால் விபத்துகள் ஏற்பட முக்கிய காரணமாக அமைகிறது. இவையெல்லாம் விபத்துகளுக்கான காரணங்களில் சில.
பேருந்து வடிவமைப்பில் சர்வதேச தரத்தினைப் பின்பற்றி பேருந்துகள் உருவாக்கப்பட் வேண்டும். இதனை அதிகாரிகள் கடைப்பிடிக்க வேண்டும். பேருந்தின் ஜன்னல் அருகே சுத்தியல் ஒன்று இருக்க வேண்டும். விபத்து நேரிட்டால் அதன்மூலம் ஜன்னலை உடனடியாக உடைத்து வெளியேற முடியும்.
சர்வதேச கருத்தரங்கில் பங்கேற்கச் சென்றால், இந்தியாவில் சாலை பாதுகாப்பு அமைப்பு குறித்து பேசும்போது என் முகத்தை மறைத்துக்கொள்ள வேண்டிய சங்கடமான சூழல் எனக்கு உண்டாகிறது.
நானும் எனது குடும்பத்தாரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மிகப்பெரிய சாலை விபத்தொன்றில் மாட்டிக்கொண்டோம். அதனைத்தொடர்ந்து, சில காலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற நேர்ந்தது. இறையருளால் நானும் எனது குடும்பமும் தப்பித்துள்ளோம்” என்றார்.
சாலை விபத்துகள் அதிக எண்ணிக்கையில் நடைபெறும் மாநிலங்களின் பட்டியலில் முதல் 4 இடங்கள்:
உத்தரப் பிரதேசம் : 23,652
தமிழ்நாடு : 18,347
மகாராஷ்டிரம் : 15,366
மத்தியப் பிரதேசம் : 13,798
சாலை விபத்துகளால் உயிரிழப்புகள் அதிக எண்ணிக்கையில் நடைபெறும் மாநகரங்களின் பட்டியலில் முதல் 3 இடங்கள்:
புதுதில்லி : 1,457
பெங்களூரு : 915
ஜெய்ப்பூர் : 850