சாலையில் ரசாயனம் கொட்டியதால் பொதுமக்கள் பாதிப்பு
ஆம்பூா் அருகே சாலையில் ரசாயனம் கொட்டியதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு புதன்கிழமை பாதிப்பு ஏற்பட்டது.
ஆம்பூா் அருகே தேவலாபுரம் ஊராட்சி பேஷ்மாம் நகா் பகுதியில் வெங்கடசமுத்திரம் சாலை வழியாக ரசாயனம் ஏற்றிச் சென்ற லாரியிலிருந்து ரசாயனம் சாலையில் வழியெங்கும் சிந்திக் கொண்டே சென்றுள்ளது. அதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத் திணறல், வாந்தி ஆகியவை ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவா்கள் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் அங்கு சென்று விசாரணை நடத்தினா். மேலும் ரசாயனம் கொண்டு சென்ற லாரியை தேடி வருகின்றனா்.
ஆம்பூா் தீயணைப்பு நிலைய அலுவலா் மெஹபூப் பேக் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் உடனடியாக சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து சாலையில் கொட்டிய ரசாயனத்தை அகற்றும் பணியை மேற்கொண்டனா்.