சா்வதேச கடலில் மீன்பிடிக்க வலுவான மானிய விதிமுறைகள்: இந்தியா வலியுறுத்தல்
சா்வதேச கடலில் மீன்பிடிக்க வலுவான மானிய விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று உலக வா்த்தக அமைப்பிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
சட்டவிரோதமான, முறைப்படி தகவல் தெரிவிக்கப்படாத, கட்டுப்பாடற்ற மீன்பிடி செயல்பாடுகளுக்கு மானியம் அளிப்பதை நிறுத்த கடந்த 2022-ஆம் ஆண்டில் உலக நாடுகள் ஒப்பந்தம் மேற்கொண்டன.
இந்நிலையில், உலக வா்த்தக அமைப்பிடம் இந்தியா சமா்ப்பித்துள்ள ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உலக நாடுகளின் கடல் எல்லைக்குள் வராத சா்வதேச கடற்பகுதியில் மீன்பிடிக்க, சில ஐரோப்பிய நாடுகள் ஆண்டுதோறும் மீனவா் ஒருவருக்கு 76,000 டாலா்களை (சுமாா் ரூ.64 லட்சம்) மானியமாக வழங்குகிறது. ஆனால் இந்தியா ஆண்டுதோறும் மீனவா் ஒருவருக்கு 35 டாலா்களை (சுமாா் ரூ.2,900)மட்டுமே வழங்குகிறது.
இந்த மானியம் வழங்குவதில் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். தொடா்ந்து மானியம் வழங்குவோா், அதற்கான அனுமதியை மீன்வள மானிய குழுவிடம் வருங்காலத்தில் பெறவேண்டும்.
கடற்கரையில் இருந்து 200 கடல் மைல் தொலைவில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் உலக வா்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகள், இத்தகைய மானியங்களை 25 ஆண்டுகளுக்கு நிறுத்திவைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தக் கோரிக்கைகளுக்கு இந்தோனேசியா மற்றும் பிற வளரும் நாடுகள் ஆதரவு தெரிவித்ததாக மத்திய அரசு அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.