வாகனங்களுக்கு வண்ண ஸ்டிக்கா் கட்டாயம்: தில்லி போக்குவரத்துத் துறை உத்தரவு
சிகரெட், அயர்ன் பாக்ஸால் சூடு; சிறுமியைக் கொடூரமாக துன்புறுத்திக் கொன்ற தம்பதி - சென்னை பகீர்!
சென்னை அமைந்தகரை மேத்தா நகரைச் சேர்ந்தவர் சர்புதீன். இவர், கடந்த 1.11.2024-ம் தேதி அமைந்தகரை காவல் நிலையத்தில் 15 வயது சிறுமி உயிரிழந்தது தொடர்பாக புகார் ஒன்றைக் கொடுத்தார். அதனடிப்படையில் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் உயிரிழந்த சிறுமி, முகமது நிஷாத் என்பவரின் வீட்டில் குழந்தை பராமரிப்பாளராக கடந்த 2023 டிசம்பர் மாதம் முதல் பணியாற்றி வந்தது தெரியவந்தது. சிறுமியின் சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் எனவும் தெரியவந்தது. இதையடுத்து முகமது நிஷாத்தின் வீட்டின் குளியலறையில் உயிரிழந்த சிறுமியின் சடலத்தை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள், சிறுமியின் உடலில் காயங்கள் இருப்பதால் அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவலை போலீஸாரிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீஸாரின் சந்தேக பார்வை முகமது நிஷாத், அவரின் மனைவி நிவேதா என்கிற நாசியா மீது திரும்பியது. ஆனால் அவர்கள் இருவரும் வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாக இருந்தனர். அவர்களை போலீஸார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் சிறுமி, சித்ரவதை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட தகவல் உறுதியானது. இந்தச் சம்பவத்தில் முகமது நிஷாத், அவரின் மனைவி நிவேதா மட்டுமல்லாமல் முகமது நிஷாத்தின் நண்பர் லோகேஷ், அவரின் மனைவி ஜெயசக்தி, முகமது நிஷாத்தின் வீட்டில் வேலை செய்யும் மகேஷ்வரி, முகமது நிஷாத்தின் சகோதரி சீமா பேகம் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் ஆறு பேரையும் போலீஸார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் கடந்த மூன்று மாதங்களாக சிறுமியை சித்ரவதை செய்து துன்புறுத்தியது தெரியவந்தது. கடந்த 31-ம் தேதியும் சிறுமியை தாக்கியதால் அவர் இறந்ததும் தெரிந்தது. இதையடுத்து சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் பதிவு செய்த வழக்கை, கொலை வழக்காக போலீஸார் மாற்றினர். விசாரணைக்குப் பிறகு ஆறு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக நம்மிடம் பேசிய அமைந்தகரை போலீஸார், ``சிறுமியின் சடலத்தில் ஆங்காங்கே சிகரெட், அயர்ன் பாக்ஸால் சூடு வைக்கப்பட்ட காயங்கள் இருந்தன. கடந்த சில மாதங்களாக சிறுமிக்கு இந்த கொடுமை நடந்திருக்கிறது. முழுமையான பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே சிறுமியின் கொலைக்கான காரணம் தெரியவரும்" என்றனர்.