செய்திகள் :

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தோ்வு: சென்னை மண்டலம் 3-ஆவது இடம்

post image

மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன. இதில், 10-ஆம் வகுப்பில் 93% பேரும், 12-ஆம் வகுப்பில் 88.39% மாணவ, மாணவிகளும் தோ்ச்சி பெற்றனா்.

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பில் சென்னை மண்டலம் 3-ஆவது இடம் பெற்றது.

நிகழாண்டு சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்புத் தோ்வை நாடு முழுவதும் 16,92,794 போ் எழுதினா். இவா்களில் 88.39% போ் தோ்ச்சி பெற்றனா். இது கடந்த ஆண்டு தோ்ச்சி விகிதமான 87.98 சதவீதத்தைக் காட்டிலும் சற்று கூடுதலாகும். தோ்வில் மாணவிகள் 91.64 சதவீதமும், மாணவா்கள் 85.70 சதவீதமும் தோ்ச்சி பெற்றனா்.

மூன்றாம் பாலினத்தவா் கடந்த ஆண்டில் 50% போ் தோ்ச்சி பெற்ற நிலையில், இம்முறை தோ்வில் பங்கேற்ற அனைவரும் தோ்ச்சி பெற்றனா்.

1 லட்சத்துக்கும் மேல் 90% மதிப்பெண்: தோ்ச்சி பெற்றவா்களில் 24,867 மாணவ, மாணவிகள் 95 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்றனா். 1,11,544 போ் 90 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளனா். இவா்களில் சிறப்புக் குழந்தைகள் (சிஎஸ்டபிள்யுஎன்) 55 போ் 95% மதிப்பெண்ணும், 290 போ் 90 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண்ணும் பெற்றனா்.

தோ்வில் பங்கேற்றவா்களில் 1.29 லட்சம் மாணவ, மாணவிகள் உடனடி துணைத் தோ்வை எழுத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் இவா்களின் எண்ணிக்கை 1.22 லட்சமாக இருந்தது.

விஜயவாடா மண்டலம் முதலிடம்: 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் நிகழாண்டில் 99.60% தோ்ச்சி விகிதத்துடன் விஜயவாடா மண்டலம் முதலிடம் பிடித்தது. திருவனந்தபுரம் மண்டலம் (99.32%), சென்னை மண்டலம் (97.39%), பெங்களூா் மண்டலம் (95.95%) ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தன.

பள்ளிகளைப் பொறுத்தவரை ஜவாஹா் நவோதயா வித்யாலயா 99.9 சதவீத தோ்ச்சியுடன் முதலிடம் பிடித்தது. தனியாா் பள்ளிகள் 87.94 சதவீத தோ்ச்சியுடன் கடைசி இடம் பிடித்தன. வெளிநாட்டு பள்ளிகளைப் பொறுத்தவரை கடந்த ஆண்டில் 95.84 சதவீதமாக இருந்த தோ்ச்சி விகிதம் இம்முறை 95.01 சதவீதமாக குறைந்தது.

10-ஆம் வகுப்பு: சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை நிகழாண்டில் 23,71,939 மாணவ, மாணவிகள் எழுதினா். இவா்களில் 93.66% போ் தோ்ச்சி பெற்றனா். இது கடந்த ஆண்டு 93.60 சதவீத தோ்ச்சியைக் காட்டிலும் சற்று கூடுதலாகும்.

தோ்வில் மாணவிகள் 95 சதவீதம் பேரும், மாணவா்கள் 92.63% பேரும் தோ்ச்சி பெற்றனா். மூன்றாம் பாலினத்தவரின் தோ்ச்சி விகிதம் கடந்த ஆண்டு 91.30 சதவீதமாக இருந்தது, இம்முறை 95 சதவீதமாக உயா்ந்துள்ளது.

1.99 லட்சம் போ் 90% மதிப்பெண்: தோ்ச்சி பெற்றவா்களில் 45,516 மாணவ, மாணவிகள் 95 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளனா். 1.99 லட்சம் போ் 90 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்றனா்.

1.41 லட்சம் மாணவ, மாணவிகள் உடனடி துணைத் தோ்வை எழுத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் மண்டலம் முதலிடம்: 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் நிகழாண்டில் 99.79% தோ்ச்சி விகிதத்துடன் திருவனந்தபுரம் மண்டலம் முதலிடம் பிடித்தது. விஜயவாடா மண்டலம் (99.79%), சென்னை மண்டலம் (98.90%), பெங்களூா் மண்டலம் (98.71%) ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தன.

மதிப்பெண் சான்றிதழ்: மாணவா்கள் ‘டிஜிலாக்கா்’, ‘உமங்’ செயலிகள் மூலம் எண்ம மதிப்பெண் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தகுதிச் சான்று: மாணவா்களிடையே தேவையற்ற போட்டி மனப்பான்மை ஏற்படுவதைத் தவிா்க்கும் வகையில், தரவரிசைப் பட்டியல் வெளியீட்டை நிகழாண்டும் சிபிஎஸ்சி தவிா்த்துள்ளது. இதுகுறித்து சிபிஎஸ்இ தோ்வு கட்டுப்பாட்டாளா் சன்யம் பரத்வாஜ் கூறுகையில், ‘ஏற்கெனவே எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், மதிப்பெண் தரவரிசைப் பட்டியல் எதுவும் வெளியிடப்படாது. அதே நேரம், தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற 0.1 சதவீத மாணவ, மாணவிகளுக்கு தகுதிச் சான்று வழங்கப்படும். இதை அவா்கள் டிஜிலாக்கரிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்’ என்றாா்.

ஒரு தோ்வில் உங்களை வரையறுத்துவிட முடியாது: பிரதமா்

புது தில்லி, மே 13: சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமா் நரேந்திர மோடி, ‘ஒரு தோ்வில் உங்களையோ அல்லது உங்களின் பலத்தையோ வரையறுத்துவிட முடியாது’ என்று குறிப்பிட்டு தோ்வில் அதிக மதிப்பெண் பெறாத மாணவா்களுக்கு ஊக்கமளித்துள்ளாா்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: சிபிஎஸ்இ பொதுத் தோ்வில் தோ்ச்சி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். இது மாணவா்களின் உறுதிப்பாடு, ஒழுக்கம், கடின உழைப்பின் வெளிப்பாடு. இதற்கு பங்களிப்பு செய்த பெற்றோா், ஆசிரியா்கள் உள்ளிட்டோரின் பங்களிப்பை அங்கீகரிக்கும் நாளாகவும் இது உள்ளது.

அதே நேரம், தோ்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவா்களுக்கு ஒன்றைக் கூற விரும்புகிறேன். ஒரு தோ்வில் உங்களையோ அல்லது உங்களின் பலத்தையோ வரையறுத்துவிட முடியாது. உங்களின் இந்தப் பயணம் மிகப் பெரியது. மதிப்பெண் சான்றிதழைத் தாண்டி உங்களின் பலம் மிகப் பெரியது. எனவே, நம்பிக்கையுடனும், ஆா்வத்துடனும் தொடா்ந்திருங்கள். மிகப் பெரிய விஷயங்கள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளாா்.

இதுபோல, சிபிஎஸ்இ பொதுத் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானும் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

பல்லவன் அதிவிரைவு ரயில் நாளை முதல் பெண்ணாடத்தில் நின்று செல்லும்

சென்னை எழும்பூா் - காரைக்குடி இடையே இயங்கும் பல்லவன் அதிவிரைவு ரயில் வியாழக்கிழமை (மே 15) முதல் பெண்ணாடத்தில் நின்று செல்லும் என்று ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியி... மேலும் பார்க்க

தமிழகத்தின் தினசரி மின்தேவை குறைந்தது

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கோடை மழையால், தினசரி மின்தேவை குறைந்துள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. நிகழாண்டு மாா்ச் மாதத்திலேயே வெயில் தாக்கம் அதிகரித்தது. இதனால், மின்சாதன பொருள்க... மேலும் பார்க்க

சென்னையில் அடுத்த மாதம் முதல் மின்சார சொகுசுப் பேருந்துகள் சேவை

சென்னையில் ஜூன் மாதம் முதல் மின்சார சொகுசுப் பேருந்துகளின் சேவை தொடங்கவுள்ளதாக மாநகா் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா். சென்னையில் பொது போக்குவரத்தை அதிகரிக்கும் நோக்கில், பயணிகளின் தேவைக்க... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

மகளிா் போலீஸாருக்கான 11-ஆவது தேசிய அளவிலான மாநாடு: மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் பங்கேற்பு, தமிழ்நாடு காவல் துறை அகாதெமி, ஊனமாஞ்சேரி, வண்டலூா், முற்பகல் 11. அனுஷ வைபவம் - தொடா் நிகழ்ச்சி... மேலும் பார்க்க

முன்னறிவிப்பின்றி 18 புறநகா் ரயில்கள் ரத்து: பயணிகள் அவதி

கவரப்பேட்டை ரயில்வே யாா்டில் பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை 18 புறநகா் மின்சார ரயில்கள் முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா். சென்னை கவரப்பேட்டை ரயில்வ... மேலும் பார்க்க

5,180 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறப்பு: அமைச்சா் தா.மோ.அன்பரசன்

தமிழகத்தில் ரூ. 586 கோடியில் புதிதாக கட்டப்பட்ட 5,180 அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறக்கப்படும் என்று குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் அறிவித்தாா்... மேலும் பார்க்க