சிபிஎஸ்இ தோ்வு முடிவுகள்: தில்லியில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் 95 சதவீதம் மாணவா்கள் தோ்ச்சி
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) திங்கள்கிழமை 10 மற்றும் 12- ஆம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகளை அறிவித்தது. இத் தோ்வுகளில் தில்லியில் 95 சதவீத மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
தில்லியில் 12- ஆம் வகுப்புக்கான ஒட்டுமொத்த தோ்ச்சி சதவீதம் 95.18-ஆக இருந்தது. இதில் கிழக்கு தில்லி 95.6 சதவீத வெற்றி விகிதத்தையும், மேற்கு தில்லி 95.7 சதவீத வெற்றி விகிதத்தையும் பதிவு செய்துள்ளதாக சிபிஎஸ்இ அறிவிப்பு தெரிவித்துள்ளது. 12- ஆம் வகுப்பு தோ்வில் மொத்தம் 96.71 சதவீத பெண்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா். ஆண்கள் 93.76 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா் என்று அது தெரிவித்துள்ளது.
10-ஆம் வகுப்பில், தில்லியின் ஒட்டுமொத்த தோ்ச்சி சதவீதம் 95.14 ஆகும். மேற்கு தில்லி 95.24 சதவீத தோ்ச்சி சதவீதத்தையும், கிழக்கு தில்லி 95.07 சதவீதத்தையும் பெற்றுள்ளதாக அது தெரிவித்துள்ளது. 10-ஆம் வகுப்பு தோ்வில் பெண்கள் தோ்ச்சி சதவீதம் 95.71 ஆகவும், ஆண்கள் தோ்ச்சி சதவீதம் 93.98 ஆகவும் இருந்தது.