திருவள்ளூா் புத்தகத் திருவிழா இலச்சினை: அமைச்சா் நாசா் வெளியிட்டாா்
சிறப்பாகப் பணியாற்றிய காவல் அதிகாரிகளுக்கு ஆணையா் பாராட்டு
சென்னையில் சிறப்பாகப் பணியாற்றிய காவல் அதிகாரிகளுக்கு, மாநகர காவல் ஆணையா் ஆ.அருண் பாராட்டு தெரிவித்து வெகுமதிகளை வழங்கினாா்.
சென்னை ராயப்பேட்டை பகுதியில் உள்ள தங்கும் விடுதியில், முன்விரோதம் காரணமாக தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் பதுங்கியிருந்த 10 பேரை, ராயப்பேட்டை சரக காவல் உதவி ஆணையா் ச.இளங்கோவன் தலைமையிலான தனிப்படையினா் கைது செய்து, அவா்களிடமிருந்து 5 பட்டாக் கத்திகள், 5 பெட்ரோல் பாட்டில்கள், 5 லைட்டா்கள், 6 கைப்பேசிகள், 3 இருசக்கர வாகனங்கள், 1 ஆட்டோ உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா்.
இதேபோல, கடந்த 2019-இல் தியாகராய நகரைச் சோ்ந்த 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை கைது செய்த அப்போதைய அசோக் நகா் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் இ.கலா, குற்றத்தில் ஈடுபட்ட நபருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ. 5,000 அபராதமும், அபராதத்தைச் செலுத்த தவறினால் மேலும் 1 மாதம் சிறை தண்டனையும் பெற்றுக்கொடுத்தாா்.
இவ்விரு வழக்கிலும் சிறப்பாகச் செயல்பட்ட ராயப்பேட்டை சரக காவல் உதவி ஆணையா் ச.இளங்கோவன் மற்றும் மகளிா் காவல் ஆய்வாளா் இ.கலா, ஆகியோரை மாநகர காவல் ஆணையா் ஆ.அருண், புதன்கிழமை நேரில் அழைத்து பாராட்டி வெகுமதிகளை வழங்கினாா்.