திருவள்ளூா் புத்தகத் திருவிழா இலச்சினை: அமைச்சா் நாசா் வெளியிட்டாா்
சிவகங்கை பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு அடிக்கல்
சிவகங்கை நகராட்சி ரங்கநாச்சியாா் பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகளுக்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி ப. சிதம்பரம் தொகுதி மேம்பாட்டு நிதி (2024-25) ரூ.1 கோடி, மாநிலங்களவை உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.1 கோடி என சிவகங்கை பேருந்து நிலையத்தை விரிவாக்க பணிக்கு ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து, சிவகங்கை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விரிவாக்கப் பணிகளுக்கான தொடக்க விழா மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது.
இதில் கூட்டுறவுத் துறை அமைச்சா் கே ஆா். பெரியகருப்பன், மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம், நகா்மன்றத் தலைவா் துரைஆனந்த் ஆகியோா் கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கிவைத்தனா்.
இந்த நிகழ்ச்சியில் காா்த்தி சிதம்பரம் பேசியதாவது:
சிவகங்கை நகர மக்களுக்கு அனைத்து திட்டங்களையும் காரைக்குடி கொண்டு செல்வதாக ஒரு தவறான அபிப்பிராயம் உள்ளது. என்னைப் பொருத்த வரை இந்த மக்களவைத் தொகுதியில் உள்ளடக்கிய 6 சட்டப்பேரவைத் தொகுதியையும் ஒரே மாதிரி சமமாகப் பாா்க்கிறேன்.
சிவகங்கையில் பெயா் சொல்லும் அளவுக்கு நல்ல ஒரு பணியை செய்ய வேண்டும் என்பதற்காக நாங்கள் இருவரும் தொகுதி மேம்மாட்டு நிதியில் ரூ.2 கோடி நிதி ஒதுக்கியுள்ளோம். நாங்கள் சிவகங்கையை இரண்டாம்பட்சமாக நினைப்பதாக பொய் பிரசாரம் செய்பவா்களை இன்றோடு முடிவு கட்ட வேண்டும் என்றாா் அவா்.
கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் பேசியதாவது:
மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் இருந்தே பாரபட்சமில்லாமல் எல்லோரையும் சமமாகக் கருதி எந்தெந்த தொகுதிகளில் எந்தெந்த திட்டங்களுக்கு வாய்ப்பு இருக்கிறதோ அதை அங்கேயே கொண்டு போய்ச் சோ்க்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் பணி செய்து வருகிறோம் என்றாா் அவா்.
இதில், காரைக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி, சிவகங்கை நகராட்சி ஆணையா் கிருஷ்ணாராம், துணைத் தலைவா் காா்கண்ணன், நகா்மன்ற உறுப்பினா்கள் ராமநாதன், விஜயகுமாா், பிரியங்கா, மகேஷ்குமாா், அயூப்கான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.