சிவகங்கையில் ஆங்கில எழுத்து கல்வெட்டு கண்டெடுப்பு
சிவகங்கையில் ஆங்கில எழுத்தால் எழுதப்பட்ட பழைமையான கல்லறைக் கல்வெட்டு சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
சிவகங்கை சமத்துவபுரம் பகுதியில் கல்வெட்டு ஒன்று கிடப்பதாக வழக்குரைஞா் சத்தியன் சிவகங்கை தொல்நடைக் குழுவுக்கு தகவல் தெரிவித்தாா். இதன் அடிப்படையில் அந்த இடத்தில் தொல்நடைக் குழு நிறுவனா் கா.காளிராசா, செயலா் ரா.நரசிம்மன் கள ஆய்வு மேற்கொண்டனா்.
இதுகுறித்து தொல்நடைக் குழு நிறுவனா் கா.காளிராசா தெரிவித்ததாவது:
1759-ஆண்டு, ஜூன் முதல் நாளில் பிறந்து, 1779-ஆண்டு, ஜூலை 25-ஆம் நாள் இறந்து போனஎலிசபெத் ஹெல்மா் எனும் பெண்ணுக்காக இந்தக் கல்லறைக் கல்வெட்டு ஆங்கில எழுத்தில் எழுதி வைக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு வரிகள் (தமிழில்): இங்கே புதைக்கப்பட்டுள்ள உடல் எலிசபெத் ஹெல்மொ். இறக்கும் போது இவருக்கு வயது 20. நான்கடி உயரமும், இரண்டடி அகலமும் உடைய கல்லில் எழுத்து புடைப்பாக உள்ளபடியும், தலைப் பகுதி அரைவட்ட வடிவிலும் மிகவும் நோ்த்தியாக கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது.
ஆங்கில எழுத்தில் கல்வெட்டு: பொதுவாக நம் பகுதியில் தமிழ் எழுத்து கல்வெட்டுகள் கிரந்தம், தெலுங்கு சொற்கள், எழுத்துகள் கிடைக்கப் பெறுகின்றன. ஆனால், இந்தக் கல்வெட்டு 246 ஆண்டுகளுக்கு முன்பு செதுக்கப்பட்ட ஆங்கில எழுத்துக் கல்வெட்டு எனக் கூறப்படுகிறது.
ஆற்காடு நவாப் ஆட்சிக்காலம்: சிவகங்கை பகுதியை சசிவா்ணருக்குப் பிறகு, முத்து வடுகநாதா் ஆண்டு வந்தாா். இவா் ஆற்காடு நவாபுக்காக ஆங்கிலேயப் படையால் 1772 -இல் கொல்லப்பட்டாா். பிறகு, 1772 -இல் இருந்து 1780-வரை 8 ஆண்டுகள் ஆற்காடு நவாபினரால் சிவகங்கை ஹுசைன் நகா் எனும் பெயரில் ஆளப்பட்டு வந்தது.
சிவகங்கையில் நவாபின் நோ் பிரதிநிதியாக ஆற்காடு நவாபின் மூத்த மகன் உம்தத் உல் உம்ரா செயல்பட்டாா். இந்தக் கல்வெட்டு 1779-இல் வெட்டப்பட்டுள்ளது. இது சிவகங்கையை மீண்டும் வேலுநாச்சியாா், மருது சகோதரா்கள் கைப்பற்றுவதற்கு முந்தைய காலமாகும்.
ஆற்காடு நவாப் காலத்தில் சிவகங்கையை ஆற்காட்டு நவாபின் சிப்பாய்களும், ஆங்கிலேயப் படை வீரா்களும் காவல் செய்ததாக வரலாறு தெரிவிக்கிறது. அவ்வாறாக இந்தப் பெண்ணும் ஆங்கிலேயப் படையுடனோ அல்லது வேறு ஏதேனும் தேவையின் பொருட்டோ கடல் கடந்து கப்பலில் இந்த ஊருக்கு வந்திருந்த வேளையில் நோய்வாய் பட்டோ அல்லது வேறு ஏதோ காரணத்தால் இறந்து போய் இருக்கலாம்.
ஆனாலும், இந்த ஊரில் 246 ஆண்டுகளுக்கு முன்னாள் கல்லறையின் தலைக்கல்லாக வைக்கப்பட்ட ஒரு கல்வெட்டு பழைமையை தாங்கி நின்று வரலாறு பேசி நிற்கிறது. இந்தக் கல்வெட்டின் தொன்மையையும், பாதுகாப்பையும் கருதி இந்தக் கல்வெட்டை சிவகங்கை அரசு அருங்காட்சியகத்தில் சிவகங்கை தொல்நடைக் குழு ஒப்படைக்க உள்ளது என்றாா் அவா்.