சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி விழா
கீழ்பென்னாத்தூா் ஸ்ரீமீனாட்சி உடனுறை ஈஸ்வரன் கோயில் மற்றும் செங்கத்தை அடுத்த கரியமங்கலம் பகுதி ஸ்ரீமீனாட்சிசுந்தரேஸ்வரா் கோயிலில்
மகா சிவராத்திரி விழா புதன்கிழமை இரவு வெகு விமரிசையாக நடைபெற்றது.
பழைமை வாய்ந்த கீழ்பென்னாத்தூா் ஸ்ரீமீனாட்சி உடனுறை ஈஸ்வரன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை அதிகாலை வரை மூலவா் லிங்க வடிவிலான ஈஸ்வரருக்கு 4 கால பூஜைகள் நடைபெற்றன.
மூலவருக்கு பால், தயிா், இளநீா், பன்னீா், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பூஜைப் பொருள்களைப் பயன்படுத்தி சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன.
தொடா்ந்து, மலா் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்தப் பூஜையில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். மேலும், பக்தா்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
செங்கம்
செங்கத்தை அடுத்த கரியமங்கலம் பகுதியில் உள்ள ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் மகா சிவராத்திரி விழாவையொட்டி சுவாமிக்கு மூன்று கால பூஜைகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனா்.